கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் ஒன்றுபட முடியும் என்றால் ஏன் கல்முனை விவகாரத்தில் உங்களால் ஒற்றுமை படமுடியாது. என்று கேள்வியெழுப்பிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்த கல்முனை மாநகர தமிழ், முஸ்லிம் மக்களை கேவலம் ஒரு அரசியலுக்காக இனவாதம், பிரதேசவாதம் பேசவைத்தவர்கள் த. தே. கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும்தான். அதிலும் ஹென்றி போன்ற அரசியல் வாதிகள்தான் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து தமிழ் மக்களை பிரித்து தங்களுடைய சுய அரசியல் இலாபம் அடைந்தார்கள். என தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் மிக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவ்வுரையில் பாராளுமன்ற உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் கல்முனை மாநகர தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு அம்மக்களின் அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்பதாக குற்றம் சாட்டினார்.
அக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து பேசிய போதே தேசிய காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
பிரதேச செயலகத்தை வைத்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகின்றீர்கள். அந்த மக்களுக்கான அதிகாரம் என்பது பிரதேச செயலகம் அல்ல உள்ளூராட்சி சபையே. அதனை வழங்குவதற்கு ஒன்றுபடுங்கள். அதுதான் நிரந்தர தீர்வு. அதைத்தான் தேசிய காங்கிரஸ் வழங்குவதற்கு முனைந்தது, அதை தடுத்தது முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தான். கல்முனை விவகாரத்தில் தே.கா பற்றி நீங்கள் போட்டிருக்கும் கருப்பு கண்ணாடியை கழட்டுங்கள். இனவாதத்தை கல்முனையில் தோற்றுவித்தவர் ஹென்றியே.
எனவே இனியாவது முஸ்லிம் மக்களின் நிலபுலங்களை காவுகொள்ளாமல் ஒற்றுமையாக இருந்து இரண்டு சமூகங்களுக்கான நிரந்தர தீர்வை வழங்குவதற்கு ஒன்றுபடுங்கள் என்று தெரிவித்தார்.