மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் பொதுஹெர முதல் கலகெதர வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2020.12.19) ஆரம்பிக்கப்பட்டது.
குருநாகல் – வதாகொட – பொதுஹெர வீதியின் லிஹினிகிரிய பகுதியை அண்மித்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கௌரவ பிரதமர்,
அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பித்து வைக்க கிடைத்தமை குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது எமக்கு பல காலமாக இருந்த கனவு என்று கூறினாலும் அது மிகையாகாது. நான் மலையகத்திற்கு செல்லும் போது அனைத்து அரசியல்வாதிகளும் என்னிடம் கேட்பது, எப்போது எமக்கு அதிவேக நெடுஞ்சாலையை தருவீர்கள் என்பதேயாகும். எனவே அந்த அதிவேக நெடுஞ்சாலை குறித்து இனிமேல் எதிர்பார்ப்பு கொண்டிருக்கலாம். இன்று ஆரம்பிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகளை இன்னும் சில ஆண்டுகளில் நிறைவுசெய்ய முடியும்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, செயலாளர் ஆகியோர் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை சங்கங்களிடம் ஒப்படைக்காது, மக நெகும திட்டத்தை செயற்படுத்துவதன் ஊடாக நெடுஞ்சாலை அமைச்சு அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது. அது தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதன் முழு பொறுப்பேற்று வீதியை அரசாங்கத்தினால் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாட்டிற்கு ஒப்பந்தம் வழங்கி இந்த வேலையை செய்வதையே நாம் சாதாரணமாக செய்து வந்தோம். வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்கள், இன்றேல் இலங்கை ஒப்பந்தக்காரர்கள். தற்போது அரசாங்கத்தினால் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளோம்.
நாம் ஆட்சிக்கு வந்த கடந்த காலத்தில் இந்நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆண்டு காலமாக நிலவிய யுத்தத்தை நிறுத்தினோம். நாட்டில் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். அனைத்து துறைகளிலும், நெடுஞ்சாலை மாத்திரமின்றி சுகாதாரம், யாழ்ப்பாணம் என அனைத்து பகுதிகளிலும் நாம் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். கடந்த ஐந்தாண்டு காலமாக எம்மை ஒதுக்கி, தோல்வியடைய செய்யப்பட்டிருந்தோம்.
அந்த ஐந்து ஆண்டுகள் நாடு பின்னோக்கி சென்றது. பின்னோக்கி சென்ற அந்த ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்தே நாம் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதனால் 2015 முதல் 2019 வரை பின்னோக்கி சென்ற அந்த ஐந்தாண்டு அபிவிருத்தி தோல் கொடுத்து, எமக்கும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அமைச்சர் ஜோள்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் இங்குள்ள அமைச்சர்கள், அனைத்து மாகாணங்களினதும் அனைத்து அமைச்சுக்களினதும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். நெடுஞ்சாலை, வீடமைப்பு திட்டங்கள், கல்வி என பின்னோக்கி சென்ற அனைத்து துறைகளையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும். இந்த நிலையில் எமக்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டு மக்களின் ஆதரவு அவசியமாகும். ஏனெனில் மக்கள் இந்த வேலைத்திட்டத்தில் உள்ளனர். சிலவேளைகளில் இந்த காணிகளை எமக்கு பெற வேண்டியேற்படும். அவற்றை பெறுவதற்கான முயற்சிகளின் போது அதனை தாமதப்படுத்த வழக்கும் தொடரும் சந்தர்ப்பங்கள் உள்ளன. தெற்க அதிவேக நெடுஞ்சாலையை ஆரம்பித்து முன்னகர்த்தி செல்லும் போது திட்டமிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. கலந்துரையாடல்களின் மூலமே அவற்றுக்கு தீர்வு கண்டோம்.
தற்போது எமக்கு அந்த தடைகள் இல்லை. அதனால் மக்கள் இன்று அபிவிருத்தி தொடர்பில் விழிப்புடன் செயற்படுவது மகிழ்ச்சியான விடயமாகும். எனவே தேசம் என்ற வகையில் நாட்டை முன்னேற்றுவதற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
எமக்கு செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். விசேடமாக குருநாகல் மாவட்டத்தில் குறைந்த வசதி கொண்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல், வீடமைப்பு திட்டம், காட்டு யானை பிரச்சினை ஆகியன குறித்து விசேட கவனம் செலுத்தி விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்கிறோம். ஜனாதிபதி அது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார். உள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை அடையாளம் கண்டு நாம் நமது வேலைகளை செய்து வருகிறோம். அதற்கு மஹா சங்கத்தினரதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியம்.
நாம் நியமிக்கப்பட்டு மூன்று மாத காலமேயாகின்றது. ஜனாதிபதிக்கு மாத்திரமே ஒரு வருடமாகிறது. இந்த மூன்று மாதங்களுக்குள் நாம் செய்த பணிகள் மிகப்பெரியது. மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை நாமும் கொண்டுள்ளோம். எதிர்காலத்திலும் அந்த நம்பிக்கையை பாதுகாத்து செயற்படுவோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டம் பொதுஹெர முதல் ஆரம்பிக்கப்பட்டு றம்புக்கனை ஊடாக கலகெதர வரையான 31.7 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
42 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 142.5 மில்லியன் ரூபாயாகும்.
மூன்றாவது கட்ட கட்டுமான பணிகளுக்காக காணி கையகப்படுத்துவதற்கு சுமார் 5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், மேலும் 100 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்கள் இதுவரை செயற்பாட்டிலுள்ளது.
முதலாவது கட்டத்தின் கீழ் கடவத்தை முதல் மீரிகம வரை 37 கிலோமீற்றர் மற்றும் இரண்டாவது கட்டத்தின் கீழ் மீரிகம முதல் குருநாகல் வரை 41 கிலோமீற்றர் நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் இடம்பெற்று வருவதுடன், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு குருநாகல் வரை இணைக்கப்படும். அத்துடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நான்காவது கட்ட பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் இதுவரை கொள்முதல் செயல்முறைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உச்ச பொருளாதார உற்பத்தித்திறன் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை அமைப்பை நிர்மாணிப்பது, கொழும்பு – கண்டி மற்றும் அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதியில் காணப்படும் வாகன நெரிசலை குறைத்தல், பொருளாதார – சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், உள்ளூர் வர்த்தக சமூகத்தினர் மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறையின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல், வடக்கு கிழக்க மற்றும மலையக பிரதேச அபிவிருத்திக்காக சாலை வலையமைப்பை விரிவாக்குதல், முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தவதற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இடமளித்தல் என்பன இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் தெமடளுவ, திக்வெஹெர ஒபய விகாராதிபதி வடமேல் மாகாண பிரதான நீதித்துறை சங்கநாயக்கர் ரெகவ ஸ்ரீ ஜீனரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றனர்.
மஹா சங்கத்தினருடன் கௌரவ அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, பியல் நிசாந்த, இந்திக அனுருத்த, லொஹான் ரத்வத்தே, நிமல் லன்சா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டீ.பீ.ஹேரத், அசங்க நவரத்ன, குணபால ரத்னசேகர, ஜயரத்ன ஹேரத், சாந்த பண்டார, சரித ஹேரத், சுமித் உடுகும்புர, மஞ்சுள திசாநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, வடமேல் மாகாண சபையின் தலைவர் டிகிரி அதிகாரி, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளிவ்.பிரேமசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.