மத்திய கலாசார நிதியத்தினால் சீகிரிய தொல்பொருள் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க தொல்லியல் பயிற்சி பாடசாலை, கௌரவ பிரதமரும், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் (2020.12.20) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி பாடசாலையின் ஊடாக புதிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளுடன் நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
திறன்கள் மற்றும் அணுகுமுறைகள் நிறைந்த சிரேஷ்ட தொல்பொருள் ஆய்வாளர்களை உருவாக்கும் அபிலாஷையுடன் இந்த தொல்லியல் பயிற்சி பாடசாலை மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.
ஒழுக்கமான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தொல்லியல் பயிற்சி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தங்களது தொல்பொருள் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த பயிற்சி பாடசாலை திறக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க அவர்கள், தொல்லியல் துறையில் சுற்றுச்சூழல் தொல்லியல், குடியேற்ற தொல்லியல், மானுடவியல் தொல்லியல் மற்றும் பண்டைய கள தொல்லியல் ஆகிய துறைகளின் முன்னோடியாவார்.
சீகிரியா திட்டத்தின் ஸ்தாபக தொல்பொருளியல் பணிப்பாளராக விளங்கியவரும் இவராவார்.
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பலதரப்பட்ட அடிப்படையில் தொல்பொருள் ஆராய்ச்சியைத் தொடங்கியதன் விளைவாக சீகிரியாவின் அரச நகர்ப்புற அம்சங்களை அடையாளம் காணுவதற்கும், சூழல் மற்றும் தொழிற்சாலைகளை அடையாளம் காணவும், அங்கு வாழ்ந்த மக்களின் குடியிருப்பு முறையை அடையாளம் காணவும், அதன்மூலம் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் ஆய்வு செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ரோஹன குமார திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, தம்புள்ள மேயர் ஜாலிய ஓபான, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.