இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவு இன்று முதல் நனவாகும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (2021.01.15) தெரிவித்தார்.
இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டுவதனை முன்னிட்டு காணொளி தொழில்நுட்பம் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்த போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கமைய எதிர்வரும் 04 ஆண்டு காலத்திற்குள் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண துறையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இரத்தினபுரி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையின் தலைவர் திலக் வீரசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இன்றைய தினம் இரத்தினபுரி தெமுமாவத்தையில் இடம்பெற்றது.
அது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றிய கௌரவ பிரதமர்,
எமது தாய்நாடு இரத்தின தீபம் என்று போற்றப்படுகிறது. உலகின் பார்வையில் அந்தளவிற்கான மதிப்பை இரத்தினக்கல் கைத்தொழிலின் மூலம் நாம் பெற்றுள்ளோம். இந்தத் கைத்தொழில் நேற்று இன்று ஆரம்பிக்கப்பட்டதொன்று அல்ல. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் இந்த பூமியிலிருந்து வெளிப்படும் கற்களின் மதிப்பை நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.
உலகின் வளர்ச்சிக்கேற்ப இந்த கைத்தொழிலும் முன்னேற்றமடைந்தது. இலங்கை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் இரத்தினக்கல் கைத்தொழிலுக்குள் போட்டியிட்டன. இருப்பினும், குறிப்பிட்ட நேரத்தில் நம் நாடு அதில் கவனம் செலுத்தவில்லை.
இதன் விளைவாக, இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்களது குடும்பங்களின் குழந்தைகளும் அதனால் பாதிக்கப்பட்டனர்.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் இரத்தினக்கல் கைத்தொழிலைப் பாதுகாக்க முயற்சித்தோம். இரத்தினக்கல்லின் மதிப்பை நாட்டின் மதிப்பிடுன் இணைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரியில் உள்ள உங்களுக்கு இரத்தினக்கல் குறித்து புதிதாக எதனையும் கூறுவதற்கு இல்லை. சப்ரகமுவ போன்றே மேலும் பல மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இரத்தினக்கல் கைத்தொழில் குறித்து நாங்கள் முன்னரைவிட அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இரத்தினபுரிக்கு இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவு இன்று முதல் நனவாவதாக நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். அது பல தசாப்தங்களாக காணப்பட்ட உங்களது கனவு நனவாகும் ஒரு சந்தர்ப்பமாகும்.
அமைக்கப்படும் இந்த அதிநவீன இரத்தினக்கல் கோபுரத்தில் தங்காபரண அதிகாரசபையின் அலுவலக வளாகமொன்று, சந்தை வளாகம், வங்கி அமைப்பு, அதி பாதுகாப்பு அமைப்பு மற்றும் உங்களுக்கு தேவையான வாகன நிறுத்துமிடம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
எமது இந்த முயற்சிகள் பலனளிக்கும் போது, எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண துறை ஊடாக 5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதனை வெற்றிக்கொள்வதற்கு பாடுபடும் கைத்தொழில்துறை அமைச்சருக்கும், தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சருக்கும், தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திப்பதாகவும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.
தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளை வரவேற்று அடிக்கல் நாட்டும் இடத்திற்கு அழைத்து சென்றார்.
இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அந்த அதிகாரசபையின் ஊழியர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் சுகாதாi அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, காமினி வலேபொட, சபரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.