மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே 35 ஆயிரத்தி 460 மெற்றிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது வரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2500 மெற்றிக் தொன் நெல்லினை மாத்திரமே அரச நெல் சந்தைப் படுத்தல் சபை கொள்வனவு செய்து வந்தது. விவசாயிகளினதும் நுகர்வோரினதும் நன்மை கருதியே இம் முறை அதிகளவான நெல்லினை கொள்வனவு செய்ய அரச நெல் சந்தைப் படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
14 தொடக்கம் 22 வீதமான ஈரப்பதனை கொண்ட நெல்லினையே அரச நெல் சந்தைப் படுத்தல் சபை கொள்வனவு செய்யும். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடனான காலநிலையால் நெல்லினை உலர்த்துவதில் விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இச் சிக்கலை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலே ஏற்பாடு செய்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் 6 தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். நடைபெற்ற கலந்துரையாடலின்படி நாளொன்றிற்கு ஏறாவூர் அல் ரபா அரிசி ஆலை 25000 கிலோகிராம்; ஏறாவூர்; மர்லியா அரிசி ஆலை 12000 கிலோகிராம்; ஓட்டமாவடி மொஹைதீன் அரிசி ஆலை 12000 கிலோகிராம்; ஏறாவூர்; அகிலாஸ் அரிசி ஆலை 25000 கிலோகிராம் நெல்லையும் காய வைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர். ஜெகதீசன் மற்றும் சிந்தா தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் தங்கள் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இவ் விசேட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் திரு. ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத், நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகள் மற்றும் பெரும்போக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.