தேவை உடைய அனைத்து தரப்பினர்களுக்கும் இன, மதபேதங்களை கடந்து உதவி செய்வதேஎனது இலட்சியம்சமூக சேவையாளர் மதிக்குமார் தெரிவிப்பு

நான் பட்ட கஷ்டங்களை வேறு எவரும் படவே கூடாது என்கிற நல்லெண்ணத்திலே இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தேவை உடைய அனைத்து தரப்பினர்களுக்கும் அவரால் முடிந்த உதவிகளை மனித நேயத்தின் பெயரால் செய்து வருகின்றேன் என்று மதிக்குமார் பௌண்டேசன் சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், வளர்ந்து வருகின்ற தொழில் முயற்சியாளருமான குணரெட்ணம் மதிக்குமார் தெரிவித்தார்.
 
மதிக்குமார் பௌண்டேசன் சமூக சேவைகள் ஸ்தாபனத்தின் பொதுநல சேவைகள், எதிர்கால வேலை திட்டங்கள் பற்றி காரைதீவில் நேற்று வியாழக்கிழமை தை பூச திருநாளில் ஊடகவியலாளர்களுக்கு எடுத்துரைத்தபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
 
நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள முனைத்தீவு என்கிற கிராமத்தை சேர்ந்தவன். நகை தொழிலை பாரம்பரிய செய்கின்ற குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தையாருக்கு தொழில் இருக்கவில்லை. எனது தாயார்தான் அன்றாட கூலி தொழில்கள் செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டி இருந்தது. எனக்கு ஒரு அக்காவும், ஒரு தம்பியும்.
 
எனக்கு படிக்க வேண்டும் என்று நிறையவே ஆசை இருந்தது. ஆனால் நாம் பசியுடனேயே பாடசாலை செல்ல வேண்டி இருந்தது. மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் உணவு உண்ண கிடைத்தும் இருக்கின்றது. பசி மயக்கத்தில் வீதிகளில் விழுந்தும் இருக்கின்றேன். இவ்வாறான குடும்ப சூழலில் எனது படிப்பை 11 வயதில் உதறி தள்ளி விட்டு கொழும்புக்கு தொழில் செய்ய சென்றேன். நான் அங்கு சென்ற பின்புதான் எனது குடும்பம் நாளடைவில் மூன்று நேரமும் உணவு உண்ண கூடிய வாய்ப்பு கிடைத்தது.
 
இறைவன் அருளாளாலும், இன, மத, மொழி பேதம் கடந்த நல்ல இதயம் உடைய மனிதர்களின் உதவியாலும் ஓரளவு வசதியான நிலையில் இன்று இருக்கின்றேன். நான் கடந்து வந்த பாதை ஒன்றும் ரோஜா பூ மெத்தை அல்ல. மாறாக கற்களும், முட்களும் நிறைந்ததாக இருந்தது. ரொம்பவே அடிபட்டு விழுந்திருக்கின்றேன். பள்ளி படிப்புதான் எனக்கு குறைவே ஒழிய அனுபவ படிப்பு நிறையவே இருக்கின்றது. எனது தொழிலை இறைவனுக்கு பயந்து நீதியாகவும், நேர்மையாகவும் மேற்கொள்கின்றேன். எனது வருமானத்தில் ஒரு பகுதியை சமூக சேவைகளை செய்வதற்கு என்று ஒதுக்கீடு செய்து வைத்திருக்கின்றேன். சமூக சேவைகளை செய்வது எனக்கு ஆத்ம திருப்தியை தருகின்றது.
 
நான் சிறிய வயதில் இருந்து பட்ட கஷ்டங்களை வேறு எவரும் பட கூடாது என்கிற சிந்தனையில் ஓரளவு வசதியான நிலைக்கு வந்த பிற்பாடு கடந்த நான்கு வருடங்களாக என்னை சமூக சேவையில் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றேன். எனது சொந்த நிதியிலேயே என்னால் முடிந்த சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றேன். மதிக்குமார் சமூக நற்பணி மன்றம் என்கிற அமைப்பை ஸ்தாபித்து அதன் மூலமாக எனது வேலை திட்டங்களை மேற்கொண்டேன். இந்த வருடத்தில் இருந்து அது மதிக்குமார் பௌண்டேசனாக மலர்ந்து இருக்கின்றது. எனக்கு நல்ல நண்பர்கள், அன்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களை உள்வாங்கிய ஆலோசனை குழு ஒன்றை மதிக்குமார் பௌண்டேசன் கொண்டிருக்கின்றது.
 
வறிய, வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்து கொடுக்கின்றேன். குறிப்பாக பாடசாலை கல்விக்கு வீட்டு வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதில் பற்றுறுதியாக இருந்து கொண்டு வறிய பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு என்னால் முடிந்த உதவி, ஒத்தாசைகளை வழங்குகின்றேன். அதே போல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுய தொழில் ஊக்குவிப்புகளை செய்து கொடுக்கின்றேன். மாற்று திறனாளிகளுக்கான வேலை திட்டங்களையும் செய்கின்றேன். 
 
தற்போது கொரோனா ஆபத்து காலம். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் என் போன்றவர்களின் உதவிகள் அத்தியாவசியமாக இருக்கின்றன. அதே போல கொரோனா தொற்று தடுப்புக்கான விழிப்பூட்டல்களும் அவசியமானவையாக உள்ளன. மதிக்குமார் பவுண்டேசன் இரு விடயங்களிலும் கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ள குடும்பங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உலர் நிவாரண பொருட்களை வழங்குகின்றோம். அதே போல தமிழர் பாரம்பரிய கலை வடிவங்கள் மூலமாக கொரோனா விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
 
 ஏற்கனவே முன்னெடுத்து வருகின்ற சேவைகளை விஸ்தரிக்க தீர்மானித்து இருக்கின்றோம்.  மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து இடங்களையும் சேர்ந்த தேவை உடைய அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டிருக்கின்றோம். அதே நேரத்தில் கிழக்கு மாகாணம் முழுவதிலும் எமது சேவைகளை கால் ஊன்ற செய்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுப்போம்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக இளையோர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். அதே நேரத்தில் இளையோர்கள் மத்தியில் மது, போதை பொருள் பாவனை போன்றவை அதிகரித்து செல்கின்றன.  கலாசார சீரழிவுகள் தலை தூக்கி நிற்கின்றன. இவற்றில் இருந்து இவர்களை மீட்க வேண்டி இருக்கின்றது. இவ்வருடம் முதல் இவை தொடர்பாக நாம் கூடுதல் கவனம் செலுத்துகின்றோம்.
 
மரண ஊர்வலங்களை செய்ய முடியாத நிலையில் எத்தனையோ வறிய குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றன. இவர்களை கருத்தில் கொண்டு  இலவச அமரர் ஊர்தி சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். அதே போல  மரண வீடுகளின் உணவு, கொட்டகை, கதிரைகள் உள்ளிட்ட தேவைகளையும் நிறைவேற்றி கொடுக்க திட்டமிட்டு இருக்கின்றோம்.
 
அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு தனிப்பட அறவே கிடையாது. நான் ஒரு சமூக சேவையாளனாகவே பரிணமிக்க விரும்புகின்றேன். என்னால் முடிந்த சேவைகளை இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதேயே இலட்சியமாக கொண்டிருக்கின்றேன்.  பெரும்பாலான அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். அவற்றில் 70 சதவீதமானவற்றை நிறைவேற்றி கொடுக்க அவர்கள் முயற்சிப்பதே இல்லை. ஆனால் என் போன்ற தன்னார்வ தொண்டர்கள்தான் களத்தில் நின்று மக்களுக்கு தேவையான சேவைகளை புரிகின்றார்கள்.

Related posts