மட்டக்களப்பு அரசடி தனியார் வைத்தியசாலைக்க முன்பாக அமைக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து மாநகர சபையினால் இன்று (19) அகற்றப்பட்டது.
அரசடி தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு அருகாமையில் இந்த வாகன தரிப்பிடம் மாநகர சபையினால் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படடிருந்தது.
இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த குறித்த வாகன தரிப்பிடத்தினால் தனியார் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கும் தொடர்ச்சியான இடையூறாக இருப்பதாகவும், முச்சக்கர வண்டிகள் அதன் தரிப்பிடத்தில் நிறுத்தமுடியாமல் வேறு இடங்களில் நிறுத்தவேண்டி ஏற்படுவதால் வாகன விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் என். சசினந்தன் எடுத்துக் கொண்ட நடவடிக்கைக்கமைவாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் மக்கள் நலன் செயற்பாடாக இவ்வாகனத் தரிப்பிடத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அவ்விடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இம்மக்கள் நலன்சார் செயற்பாட்டினை மேற்கொண்டதற்காக பொதுமக்கள் அரச அதிகாரிக்கும் மாநகர முதல்வருக்கும் நன்றி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.