தடையுத்தரவு வழங்காமல் அழைப்பாணையா?மட்டு.மாவட்ட த.தே.கூ. எம்.பி கோ.கருணாகரம் ஆதங்கம்

எனக்கு கல்முனையில் பொலிசாரால் தடையுத்தரவு தரப்படாமல் தற்போது கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன். அதிருப்தியடைகின்றேன்.இது நீதிக்குப் புறம்பான செயல். இதற்கான பதிலை நான்நீதிமன்றில் எனது சட்டத்தரணி மூலமாக எடுத்துரைப்பேன்.
 
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான  கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
நீதிமன்றஅழைப்பாணை கிடைக்கப்பெற்றமை தொடர்பில் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
தமிழ்பேசும்மக்களின் பிரச்சினையை உலகிற்கு  ஜனநாயகவழியில் உரத்துச்சொல்லிய பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் சட்டத்தையும் நீதியையும் மதித்து தடையுத்தரவு தரப்படாத பிரதேசங்களில் கலந்துகொண்டேன்.
அம்பாறை மாவட்டத்தைப்பொறுத்தவரை எனக்கு பொத்துவில் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றுப் பொலிசாரால் நீதிமன்ற தடையுத்தரவு தரப்பட்டது. ஆதலால் நான் அந்தப்பிரதேசத்தில் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.
 
 அவை தவிர்ந்த சம்மாந்துறை கல்முனைப்பிரதேச பேரணியில் பங்கேற்றேன். ஏனெனில் சம்மாந்துறை மற்றும் கல்முனைப்பொலிசாரால் நீதிமன்ற தடையுத்தரவு எனக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போது கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டு எதிர்வரும்  ஏப்ரல் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டுள்ளேன். தடையுத்தரவு தராமல் அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன்.
 
ஜனநாயக நாட்டில் ஜனநாயகமுறைப்படி அஹிம்சை வழியில் தமிழ்மக்கள் தமது உரிமைகளைப்பெற போராடினார்கள். அது பலனளிக்காதுவிடவே ஆயுதரீதியில் போராடினார்கள். 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்டபிற்பாடு மாறிமாறிவந்த சிங்கள அரசாங்கங்கள் எமக்கான நிரந்தரதீர்வைத்தரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.
சிறுபான்மை மக்களால் ஆட்சிக்குவந்த நல்லாட்சிஅரசு கூட ரணிலின் நரித்தந்திரத்தால் ஏமாற்றியது. மஹிந்த நினைத்திருந்தால் தீர்வைத்திருக்கலாம். சிங்களமக்களும் ஏற்றிருப்பார்கள். அதுவும் நடக்கவில்லை.
 
ஆதலால் 12வருட ஏமாற்றத்தின்விளைவாக மீண்டும் தமிழ்த்தேசிய உணர்வோடு ஜனாயகவழியில் பேரணி நடாத்தப்புறப்பட்டபோது அரசு இரும்புக்கரம்கொண்டு நசுக்கமுற்பட்டது. வீறுகொண்ட தமிழினம் அதைப்பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக பேரணியை நடாத்திமுடித்தது.
 
சரி இவ் அழைப்பாணை ஜெனீவாமனித உரிமை பேரவை அமர்வு நிறைவுற்ற பிற்பாடு அதாவது ஏப்ரல் 30ஆம் திகதி மன்றிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன்.
 
இலங்கைக்கு எதிராக ராஜபக்ஸ சகோதரர்களுக்கெதிராக பலநாடுகள் சேர்ந்து போர்க்குற்றம் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் தமது ஆடசேபங்களை தெரிவிக்கவிருக்கின்றன. அதற்குள் நீதிமன்ற அழைப்பைவிடுத்து சங்கடத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கவே இப்படி காலம்தாழ்த்தி அழைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன்.
இது திட்டமிட்ட செயலாக இருக்கலாமெனக்கருதுகிறேன் என்றார்.

Related posts