கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் –

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  (2021.03.17) முற்பகல் தெரிவித்தார்.
 
இலங்கை, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டுகள் பூர்த்தி விழாவை முன்னிட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக அலரி மாளிகையில் இடம்பெற்ற உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
பிரதமர் அலுவலகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்தது.
 
1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிய பதக்கங்கள் இவ்வளவு காலமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்பட்ட நிலையில், அப்பதக்கங்கள் கௌரவ பிரதமரின் கரங்களினால் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
 
உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டு விழாவை முன்னிட்டு QR குறியீட்டுடனான முதலாவது நினைவு முத்திரை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் வழங்கப்பட்டதுடன், அவர்களினால் கௌரவ பிரதமர் மற்றும் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 
நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த வெற்றி இன்று நேற்று இடம்பெற்றது போன்று நினைவிலுள்ளது. இன்று எமது கிரிக்கெட் களத்தில் இடம்பெறுவதை நோக்கும் போது எமது இந்த வெற்றியை கிரிக்கெட் இரசிகர்கள் அடிக்கடி நினைவுபடுத்துகின்றனர் என்பதை நான் கூற  வேண்டும்.
 
நிகழ்காலத்தை சரிசெய்ய கடந்த காலம் முக்கியமானதாகும். அன்று அரங்கில் விளையாடியவர்கள் சாதாரண கிரிக்கெட் வீரர்கள் அல்லர். நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொண்ட இளைஞர்களாவர். அன்றைய எமது வெற்றியை ஆசிய நாடுகள் தாம் பெற்ற வெற்றியாகவே கருதின.
 
அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அன்று எமது நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாது எனக் கூறின. இலங்கையில் அக்காலப்பகுதியில் காணப்பட்ட பயங்கரவாதம், கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களே இலங்கைக்கு வராதிருப்பதற்கான காரணங்களாக குறிப்பிட்டனர்.
 
எமது விமான நிலையங்கள் போன்றே எமது துறைமுகமும் உலகின் பாதுகாப்பற்ற இடங்களாக பல முறை பெயரிடப்பட்டது. அவ்வாறானதொரு நிலைமையில் நான் மேலே குறிப்பிட்ட நாடுகள் உலகக் கிண்ணத்தை வழங்கினாலும் இலங்கைக்கு வர முடியாது எனக் குறிப்பிட்டன.
 
கிரிக்கெட் சுற்றுலா அணிகள் இலங்கைக்கு வருவதாக இருப்பின் அவர்கள் வந்து தங்கும் அறைக்கு முன்னால் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் நான் உறங்குகிறேன். நீங்கள் வருகைதந்து கிரிக்கெட் தொடரில் பங்குபெறுங்கள் என அப்போதைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டமை எனக்கு நினைவிருக்கிறது. ஊடகங்களில் பகிரங்கமாக அவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறுவதற்கு அந்நாடுகள் விரும்பவில்லை.
 
இலங்கையை வெற்றி பெறச் செய்வதில் காணப்பட்ட விருப்பமின்மையே இங்கு வருகை தராமைக்கு காரணம் என அச்சந்தர்ப்பத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் உணர்ந்தன. அதன்போது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எமது நாட்டிற்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டின. அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு எமக்கு ஊக்கமளித்தனர்.
 
நாம் உலகக் கிண்ணத்தை வென்ற போட்டி பாகிஸ்தானிலேயே இடம்பெற்றது. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் எமக்கு வழங்கிய உற்சாகத்திற்கமைய, அதனை அவர்கள் ஆசியாவின் வெற்றியாகவே நோக்கியுள்ளனர் என்பது எமக்கு புலப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு, பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆரவாரம் செய்த நாள் அதுவாகும்.
 
அதுமாத்திரமன்றி முரளிதரன் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை களத்திலிருந்து வெளியேற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்படையும் எனக்கு நினைவிருக்கிறது. இந்த வீரருக்கு எதிராக மிகவும் நியாயமற்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும், முரளிதரனை பாதுகாப்பதற்கு அப்போதைய தலைமைத்துவம் பெரும் சேவையாற்றியது. இவற்றின் காரணமாக, நமது கிரிக்கெட் வீரர்களின் ஒரு அணி என்ற உணர்வு வெகுவாக அதிகரித்தது. அந்த சம்பவம் முரளியை இன்று உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது என்று நான் நம்புகிறேன்.
 
இந்த உலகக் கிண்ணம் தொடர்பில் நான் கேள்விப்பட்ட ஒரு கதை எனக்கு நினைவிருக்கிறது. 1996 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி இந்தியாவில் ஒரு அரங்கத்திலேயே நடைபெற்றது. போட்டியின் இறுதி நெருங்கும்போது இந்திய அணியின் இரசிகர்கள் கிளர்ந்தெழுந்து தொடர்ந்து கற்களையும் போத்தல்களையும் அரங்கிற்குள் வீச ஆரம்பித்தனர். அந்த காட்சியை முழு உலகமுமே பார்த்தது.
 
அந்நேரத்தில் அணியின் துணைத்தலைவர் அரவிந்த டி சில்வா, மைதானத்தின் எல்லைக்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். அதன்போது மேலதிக வீரராக இருந்த உபுல் சந்தன, அரவிந்த டி சில்வாவிடம் சென்று நீங்கள் உள்ளே களத்தடுப்பில் ஈடுபடுங்கள், நான் எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடுகிறேன், கற்கள், போத்தல்களால் நீங்கள் தாக்கப்பட்டால் இறுதி போட்டியில் உங்களுக்கு விளையாட முடியாது போகும். அவ்வாறு இடம்பெறின் நாம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என கூறினாராம். தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கக் கூடிய அளவிற்கு நாட்டின் மீது மிகுந்த பற்றுகொண்ட அணியொன்று அப்போது காணப்பட்டது என்பதை நான் கூற வேண்டும். எனவே இது மனிதகுலத்தின் கதையாகும்.
 
உலகக் கிண்ணத்தை வென்று இந்த அணி இலங்கைக்கு விஜயம் செய்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அன்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக செயற்ப்பட்ட எமது ஆட்சியே காணப்பட்டது. அர்ஜுன ரணதுங்கவின் தந்தை அரசாங்கத்தின் அமைச்சரொருவராக இருந்தார். எனினும் உலகக் கிண்ணத்தை தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த காமினி திசாநாயக்க அவர்களின் இல்லத்திற்கே அர்ஜுன ரணதுங்க எடுத்துச் சென்றார்.
 
உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு காமினி திசாநாயக்க அவர்களின் காலப்பகுதியில் அடித்தளம் இடப்பட்டமையை கௌரவிக்கும் முகமாகவே அவ்வாறு செய்யப்பட்டது. எனவே இன்று நாம் கொண்டாடுவது ஒரு மனிதகுலத்தின் கதையாகும். அன்று கிரிக்கெட் விளையாடிய மிகச்சிறந்த வீரர்களின் கிரிக்கெட் போட்டிகள் இந்நாட்களில் இடம்பெறுகின்றன. அவர்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதும் விளங்குகிறது. அந்த வெற்றியில் இரகசியம் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள வசதிகளோ அல்லது பணமோ அல்ல. கடந்த காலத்தில் ஒழுக்கமாக விளையாடியதன் மூலம் பெற்ற பயிற்சியே ஆகும். கடந்த காலத்தில் வீரர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை உணர்வு. அதுவே உலகக் கிண்ணத்தை வெல்ல எங்களுக்கு உதவியது.
 
எமக்கு நிகழ்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்பவே கடந்த காலம் உள்ளது. இன்று எமக்கு கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு பாடமாக கடந்த காலமே உள்ளது. அந்த கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் இன்று நாமுள்ள துயர நிலையிலிருந்து விடுபட முடியும் என நான் நம்புகின்றேன். கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை, மனிதநேயம் என்பவற்றை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் அதேபோன்றதொரு வெற்றியை பெற முடியும் என நான் நம்புகின்றேன் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.
 
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் உரையாற்றினார்.
 
1996 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. நாம் பாடசாலை மாணவர்களாக இவ்வெற்றியை கொண்டாடினோம்.
 
இந்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் வெல்லும் திறனும் சந்தர்ப்பமும் இருப்பதாக நாங்கள் அக்காலத்தில் நம்பினோம்.
1996 உலகக் கிண்ண வெற்றியை நம் நாட்டு விளையாட்டுத்துறையின் திருப்புமுனை என்று கூறுவது சரியானதாக அமையும்.
 
1996ஆம் ஆண்டு முதல், நாங்கள் இரு தடவைகள் 50 ஓவர்களை கொண்ட போட்டிகளில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தோம்.
 
அதேபோன்று இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியிலும் நாங்கள் இறுதிப் போட்டியை எட்டியுள்ளோம். 2014 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை எங்களால் வெல்ல முடிந்தது. இவை அனைத்திற்கும் 1996 உலகக் கிண்ண வெற்றியே அடித்தளமாக அமைந்தது.
 
இன்று குமார் தர்மசேன, ரொஷான் மஹனாம ஆகியோர் ஐ.சி.சி நடுவர்களாக, உலகில் உலக கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். மேலும், இந்த 1996 அணியில் இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல பயிற்சியாளர்கள் உள்ளனர்.
 
இச்சந்தர்ப்பத்தில் பயிற்சியாளர் டேவ் வோட்மோர் அவர்களை நினைவுகூர வேண்டும். அப்போதைய பயிற்சியாளர் மற்றும் அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முகாமையாளர், கௌரவ தலைவர் உட்பட அனைத்து முகாமையாளர்கள் உள்ளிட்ட இந்த வெற்றிக்கு பங்களித்த மற்றும் அர்ப்பணித்த அனைவரையும் 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்  இத்தருணத்தில் நினைவுகூருகின்றோம்.
 
நம் நாட்டில் விளையாட்டுகளைப் பற்றி பேசும்போது, நமது கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டு என்பதை நாம் அறிவோம். எமது கிரிக்கெட்டில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கு துணை நிற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
 
1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் உறுப்பினர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் வீழ்ச்சியடையும் போது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.
 
புதிய வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், எதிர்காலத்தில் மீண்டும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியை உருவாக்குவதற்கும் இவர்களது பங்களிப்பு கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
 
தோல்வியும் வெற்றியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும், ஆனால் நாட்டிற்காக விளையாடுகின்றோம் என்ற அணி உணர்வையே  நாம் அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.
 
அவ்வாறானதொரு உணர்வுடன் விளையாடினால் உலகக் கிண்ணத்தை வெல்லக கூடியதொரு அணியை எமது நாட்டில் உருவாக்க முடியும்.
 
எனக்கு இந்த நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிடினும், கிரிக்கெட் விளையாட்டை நேசித்த ஒரு தலைவராக மற்றும் விளையாட்டை நேசித்த ஒரு தலைவராக கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு விழாவிற்கு தலைமை வகித்தமைக்கு  கௌரவ பிரதமருக்கு நன்றி செலுத்துவதாக கௌரவ  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அவர்கள்,
 
சர்வதேசத்தின் மத்தியில் நாம் பிரபலமடையாத காலத்திலும் கௌரவ பிரதமர் அவர்கள் எமது கிரிக்கெட் அணி சார்பாக செயற்பட்டமை எமக்கு நினைவிருக்கிறது. நாம் ஒரு அணி என்ற ரீதியில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 25 ஆண்டுகள் கடந்தும் இந்நாடு எம்மை மறக்கவில்லை.
 
எங்களுக்குள் நிர்வாக சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் சிரேஷ்ட வீரர்களாகிய நாங்கள் இளம் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.கடந்த காலத்தில் கிரிக்கெட்டுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் முறையான நிர்வாகத்துடன் இந்நாட்டில் கிரிக்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.
 
குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிபெறும் போது அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ.திசாநாயக்க, அப்போதைய விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கிரிக்கெட் தலைவi; (1996) ஆனா புஞ்சிஹேவா, இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள், உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட கிரிக்கெட் அணியின் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts