போதையற்ற நாட்டை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் திட்டம் மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு

போதையற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் திட்டம் அதனாலேயே
போதைப்பொருள் பாவனையினை குறைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதென பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
சிறுவர் சிறுமியர்களுக்கான “வினோதமான உல்லாச உலகம்” சிறுவர் பொழுதுபோக்கு பூங்காவினை மட்டக்களப்பில் திறந்துவைத்துவிட்டு பிரதம அதிதியுரை நிகழ்த்துகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இராஜாங்க அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சிறுவர் துஸ்பிரயோகங்களை செய்கின்றவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுடன், கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது சிறுவர் துஸ்பிரயோகங்கள் பெருமளவு குறைந்திருப்பதாகவும்,
அதே போன்று போதைப்பொருள் பாவனையினை குறைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட பலர் இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
 
போதையை ஒழித்து போதையற்ற ஒரு நாட்டை உருவாக்குவதிலே நாட்டினுடைய  ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
போதையற்ற ஒரு சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும், அந்த போதையற்ற ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கினாலே நாட்டை கட்டியெழுப்பி
இந்த நாட்டை சுபீட்சத்தின்பால் கொண்டு செல்ல முடியும்.
 
ஆகவே போதையை ஒழிக்கின்ற, மகளீர் நலனைப் பேணுகின்ற அதேபோன்று சிறுவர் நலனைப் போனுகின்ற வகையிலான வேலைத்திட்டங்களை அரசாங்கம் விரிவாக முன்னெடுத்துவருகின்றது.
 
கடந்த காலத்திலே மூன்று தசாப்தகால யுத்தத்தில் வடகிழக்கில்
பல பின்தங்கிய கிராமங்களில் சிறுவர் பூங்காக்கள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. மைதானங்கள் விளையாடக் கூட வசதியற்ற நிலையில் காணப்படுகின்றன. அது மட்டுமல்லாது கிராம புறங்களில் நல்ல திறமையான மாணவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் இவர்களுக்கான மைதானங்கள் இல்லை. சில இடங்களிலே மைதானங்கள் இருந்தாலும் அதற்குரிய பெளதீக வள கட்டமைப்புக்கள் இல்லை, இப்போது எமது நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்கள் ஊடாகவும், பாடசாலைகள் விளையாட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாகவும் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை இப்பொழுது மாவட்ட ரீதியாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம், அதனடிப்படையில் பின்தங்கிய கிராமங்களில் பொது மைதானங்கள், பாடசாலை மைதானங்கள் வளப்படுத்துவதுடன் முன்பள்ளி பூங்காக்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து வருகின்றோம் என்று தெரிவித்திருந்தார்.

Related posts