பெற்றி கெம்பஸை கொத்தலாவல இராணுவ பல்கலைக்கு வழங்குவது அநீதியாகும்;தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்குமாறு கோரிக்கை

பெற்றி கெம்பஸ் எனும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய தேவை இருக்குமாயின், அதனை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைத்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்கிழக்கு கல்விப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இது விடயமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அப்பேரவை அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
 
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சி காரணமாக அரபு நாடுகளின் நிதி உதவியுடன் அனைத்து நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெற்றி கெம்பஸ் எனும் பல்கலைக்கழகக் கல்லூரியானது ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, அரசினால் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய ஷரீஆவை போதிக்கும் நோக்கத்தில் இக்கல்லூரி உருவாக்கப்பட்டதாக பிரசாரப்படுத்தப்பட்டே அதனை இயங்க விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 
இப்பல்கலைக்கழக கல்லூரியானது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களையும் உள்ளீர்த்து அனைத்து பீடங்களையும் உள்ளடக்கி தேசிய ரீதியில் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கும் விரிவுரையாளர்களாகவும் சிங்கள, தமிழ் கல்வியியலாளர்களும் பேராசியர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். எனினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு. முஸ்லிம்களுக்கான தனி ஷரீஆ பல்கலைக்கழகம் என்று முத்திரை குத்தப்பட்டே முடக்கப்பட்டிருக்கிறது.
 
எவ்வாறாயினும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் வளங்களை கிழக்கு பல்கலைக்கழகம் கோரியதாகவும் அது மறுக்கப்பட்டு, கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழகத்தின் தேவைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி கல்வி அமைச்சரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது பெரும் அநீதியான விடயமாகும்.
 
அவ்வாறு இராணுவ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் பிரதேச மக்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதுடன் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
எனினும் பெற்றி கெம்பஸ் பல்கலைக்கழக நிர்மாணத்திற்கு அரபு நாடுகள் நிதியுதவி வழங்கியுள்ளமையாலும் இதன் கட்டிடங்கள் முஸ்லிம் கலாசார பாராம்பரிய கலை நுட்ப வடிவில் அமைக்கப்பட்டிருப்பதாலும் இதனை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கலாசார பீடத்தின் பாவனைக்கும் அப்பல்கலைக் கழகத்திற்கென சட்ட பீடத்தை உருவாக்குவதற்குமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்- என தென்கிழக்கு கல்வி பேரவை வலியுறுத்தியுள்ளது.
 

Related posts