நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம்

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (21) அலரி மாளிகையில் தெரிவித்தார்.
 
குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குடம் மூன்று திட்டங்களை ஸும் தொழில்நுட்பம் ஊடாக ஒரே நேரத்தில் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
 
குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டம், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ நீர் வழங்கல் திட்டம், காலி மாவட்டத்தில் ஹபுகல நீர் வழங்கல் திட்டம் ஆகியன கௌரவ பிரதமரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
 
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய 2025இல் அனைவருக்கும் நீர் என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில் குருநாகல், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் இந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் 07 பிரதேச செயலக பிரிவுகளின் 377 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் நன்மையடை உள்ளனர்.
 
தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டத்திற்கு 1022 கோடி ரூபாயும், கலிகமுவ நீர் வழங்கல் திட்டத்திற்கு 230 கோடி ரூபாய் மற்றும் ஹபுகல நீர் வழங்கல் திட்டத்திற்கு 32 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கட்டுமானங்களுக்கு உள்ளூர் பொறியாளர்களினால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் தலையீட்டால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
நீர் வழங்கல் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளித்ததை தொடர்ந்து கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
 
2025ஆம் ஆண்டிற்குள் முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் இலக்கை அடைவதே எமது அரசாங்கத்தின் இலக்காகும். அத்தேசிய திட்டத்தின் மூன்று பெரிய நீர் வழங்கல் திட்டங்கள் இன்று குருநாகல், கேகாலை மற்றும் காலி மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
 
பூமியின் 71 சதவீதம் நீரால் சூழ்ந்திருப்பதை நாம் அறிவோம்.
 
ஆனால் அந்த தண்ணீரை நாம் பயன்படுத்த முடியாது. அதில் பெரும்பாலானவை கடல் நீர். எனவே நாம் அந்த தண்ணீரைக் குடிக்க முடியாது. இதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது.
 
அந்தவகையில் நோக்கினால் 3 சதவீத நீர் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. அதிலும் 0.5 சதவீதத்திற்கும் குறைவான நீரையே அருந்த முடியும். மனிதர்களின் சில செயற்பாடுகள் காரணமாக மக்கள் குடிக்கும் நீர் கூட இன்று மாசுபடுகிறது.
 
உலகை எடுத்து கொண்டாலும் சரி, இலங்கையை எடுத்து கொண்டாலும்  சரி, நீங்கள் சில சமயங்களில் இந்த உண்மையை அனுபவிப்பீர்கள். கட்டளைகளால் மட்டும் இதை நிறுத்த முடியாது.
 
எனவே, சுத்தமான நீரின் முக்கியத்துவத்தை பாடசாலை காலம் முதல் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அவர்கள்தான் ஒரு நாள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ளனர். இன்று நாம் செய்ய வேண்டியது அவர்களின் எதிர்காலத்திற்கான தண்ணீரைப் பாதுகாப்பதாகும்.
 
இன்று முழு உலகமும் இது குறித்து கவனம் செலுத்தி, நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசி வருகிறது.
 
எமது நாட்டின் மன்னர்கள் அன்று தண்ணீரின் மதிப்பை உணர்ந்து எதிர்காலத்திற்காக செய்த பணிகளின் பிரதிபலன்களை நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம். பெரிய குளங்களை அமைத்து நீர்ப்பாசன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதுடன் அந்த அனைத்து இடங்களிலும் நீர் பாதுகாப்பும் இடம்பெற்றது.
 
வானத்தில் இருந்து விழும் ஒரு சொட்டு நீர் கூட மனிதனின் பயன்பாடின்றி வீணாக கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற மஹா பராக்கிரமபாகு மன்னனின் கூற்று இன்றைக்கும் பொருந்தும்.
 
பிற்காலத்தில் நம் நாட்டின் விவசாயத்துடன் இரசாயனப் பொருட்கள் நீரில் கலப்பதைத் தடுப்பதன் மூலம் நாம் பல சிக்கல்களைத் தவிர்த்திருக்க முடியும்.
 
தூய்மையான குடிநீர் இல்லாததால் ரஜரட மக்கள் இன்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை ரஜரட மட்டுமல்ல, பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
 
தேவையான தீர்வு இல்லாமல், சுத்தமான குடிநீரின் பிரச்சினையைப் பற்றி பேசுவது மக்களுக்கு பயனளிக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் இது தொடர்பில் ஆராய்ந்தோம்.
 
கூறுவதற்கும் கவலையளிக்கிறது. ஆனால் குறிப்பிடாது இருக்கவும் முடியாது.   தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின்  தகவல்களின்படி நம் நாட்டில் 50 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. அவ்வாறாயின் அனைவரும் சுத்தமான குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
 
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து எமக்கு நேரடியாக தெரிவித்தனர். அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை. குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கொஞ்சம் தருமாறே அவர்கள் கோரினர்.
 
அதனால் 2025ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கி, நாடு முழுவதும் பல பாரிய நீர்வழங்கல் திட்டங்களைத் தொடங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் மூன்று மாத்திரமே இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகிறது.
 
சுத்தமான குடிநீர் பற்றாக்குறையால் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள மஹவ மற்றும் பொல்பிதிகம பிரதேச செயலகங்களில் உள்ள 92 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் சார்பாகவே இந்த மூன்று திட்டங்களில் குருநாகலில் உள்ள தெதுரு ஓயா திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.
 
இதற்காக கொரிய அரசாங்கம் எமக்கு 8901 மில்லியன் கடனுதவி வழங்கியது. அதற்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கம் அதற்காக 1326 மில்லியன் ரூபாயை செயவிட்டது.
 
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதன் கட்டுமானப் பணிகளை பொறுப்பேற்று உரிய வகையில் நிறைவு செய்தது.
 
25 ஆயிரம் குடும்பங்களின் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் இன்று முதல் இத்திட்டத்தின் ஊடாக சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வர் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் எனக்கு அறிவித்தார்.
 
அதேபோன்று, இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் கேகாலை கலிகமுவ நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் மேலும் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வர். உலக வங்கியின் ஆதரவுடன் நாம் அந்த திட்டத்திற்காக 2300 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளோம்.
 
மேலும் 325 மில்லியன் ரூபாய் செலவிட்டு நிறைவுசெய்யப்பட்டு காலி ஹபுகல நீர் வழங்கல் திட்டமும் மிக முக்கியமானதொரு திட்டமாகும்.
 
போபே, பொத்தல, ஹபராதுவ, அக்மீமன மற்றும் ஹினிதும பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு இதனூhக சுத்தமான குடிநீர் கிடைக்கும்.
 
இவ்வாறாக இவ்வாண்டில் மாத்திரம் புதிய 33 திட்டங்கள் ஊடாக 2 இலட்சத்து 45 ஆயிரம் 500 வீடுகளுக்கு புதிதாக நீர் வழங்கல் இணைப்புகளை பெற்றுக்கொடுக்க நீர் வழங்கல் அமைச்சு தயாராகவுள்ளது.
 
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என அமைச்சர் வாசுதேவ, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் என்னிடம் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தனர்.
 
ஒரு நாடு என்ற ரீதியில் தொற்று நிலைமைக்கு நாம் வெற்றிகரமாக முகங்கொடுத்து அபிவிருத்தி செயற்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது எமக்கு தெரியும்.
 
தவறான அரசியல் தீர்மானங்கள் காரணமாக ஒவ்வொரு காலக்கட்டத்தில் பின்னோக்கி நகர்ந்த நாட்டை மீண்டும் பின்னோக்கி செல்ல நாம் இடமளிக்க மாட்டோம்.
 
இந்த அமைச்சின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இப்பணிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை நான் அறிவேன். அதற்காக ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊதிய உயர்வொன்றையும் நாம் அண்மையில் பெற்றுக் கொடுத்தோம்.
 
மக்களுக்கு சுத்தமான குடிநீரை அவர்களது வீட்டிலேயே வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு பாரிய தொகை செலவாகிறது. எனினும் அதற்காக நாம் அறவிடுவது ஒரு அலகை உற்பத்தி செய்வதற்காக செலவாகும் தொகையின் பாதிக்கும் குறைவாகும்.
 
எனவே நமது நாட்டு மக்கள் குடிநீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தும் போது அது குறித்தும் சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
 
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர்களான சனத் நிசாந்த, தயாசிறி ஜயசேகர, கனக ஹேரத், தாரக பாலசூரியா, மொஹன் பிரியதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமித் உடுகும்புர, வை.ஜே.ரத்னசேகர, சமன்பிரிய ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க, சரித்த ஹேரத், ராஜிகா விக்ரமசிங்க, சந்திம வீரக்கொடி, சம்பத் அதுகோரல, இசுறு தொடங்கொ மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, இலங்கைக்கான கொரிய தூதுவர் வூன் ஜின் ஜங்க், நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க, பிரதேச சபையின் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts