கடந்த 14 நாட்களில் மட்டக்களப்பு ,ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் 157 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், குறித்த ஆடைத்தொழிற்சாலை எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் மூடப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றியவர்களில் வவுணதீவு சுகாதார பிரிவில் 49 பேரும்,பட்டிப்பளை சுகாதார பிரிவில் 22 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 19 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 18 பேரும், கிரான்,செங்கலடி சுகாதார பிரிவில் தலா 14 பேரும் ,களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி சுகாதார பிரிவில் தலா 09 பேரும் ,வாழைச்சேனை சுகாதார பிரிவில் மூவருமாக இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் ஜுன் மாதம் 06ஆம் திகதி வரை குறித்த ஆடைத்தொழிற்சாலையினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 கோவிட்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைக்கும் 2397 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.26 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.