ஒலுவில் மீன்பிடி துறைமுகம் பலவருடங்களாக உட்புகும் வழி, மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதனால் ஆழ்கடல் மீனவர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் ஏனைய தங்கிவாழும் பல குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சுமார் 265 பெரிய படகுகள் காணப்படுவதுடன் 100 க்கும் கூடுதலான எண்ணிக்கையில் சிறிய படகுகளும் காணப்படுகிறது. கடல் கொந்தளிப்பு நிலைமைகளில் இப்படகுகள் வாழைச்சேனை படகு துறைக்கு கொண்டு செல்வதால் ஒவ்வொரு வருடமும் பல மாதங்கள் தொழில் இல்லாத நிலை ஏற்படுகிறது என அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் கவலை வெளியிட்டனர்.
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் சிலருக்கும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்குமிடையே சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பேணி அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலிலையே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இங்கு மேலும் கருத்து தெரிவித்த மீனவர்கள், குறிப்பாக கடந்த ஆண்டு கோவிட் 19 நிலமை காரணமாக வாழைச்சேனையில் கட்டப்பட்ட படகுகள் வெளிக்கொணர முடியாத நிலையில் 4 மாதங்கள் தொழிலுக்கு செல்லமுடியாத நிலை இருந்தது. இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பு செய்யும் இப்பிரதேசம், ஒரு புறம் வருமானம் இழந்து காணப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார பங்களிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை தெளிவுபடுத்தினர்.
மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா, கல்முனை பிராந்திய ஆழ்கடல் மீனவர்களின் பிரச்சினைகளை பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும், கல்முனை கரையோர ஆழ்கடல் மீனவர்களின் முக்கிய பிரச்சனைகளாக காணப்படும் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை இயங்கச்செய்தல், ரேடியோ தொடர்பாடல் கருவிகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ளல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மற்றும் கடற்றொழில், துறைமுகங்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மீனவர்களுக்கு உறுதியளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,தென்னிலங்கை மீனவர்களுடன் ஒரு உறவுப் பாலமாக ஒலுவில் மீன்பிடி துறைமுகம் காணப்படுகிறது. இதன் மூலம் ஒலுவில் பிரதேசத்தில் பாரிய அளவில் மீன் மட்டுமன்றி ஏனைய இணை வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வாய்ப்பு எல்லா பிரதேச மக்களுக்கும் ஏற்படுகிறது. எனவே ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மிகவிரைவில் திறப்பதற்கு தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து செயல்படுத்த உறுதியளித்த பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா அவர்களுக்கு மீனவர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள தோணாவை கடலுடன் இணைத்து படகு துறை அமைப்பதற்கு காலத்திற்குக் காலம் பல முன்மொழிவுகள் செய்யப்பட்டன. மறைந்த மு.கா ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக ஏற்றதன் பின்னர் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் படகு துறை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஒரு சிலரால் அது தடுக்கப்பட்டது. அதேபோல் தான் பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 375 மில்லியன் ரூபா செலவில் சாய்ந்தமருது நங்கூரம் இடும் தளம் அமைப்பதற்கு திட்டங்கள் அன்றைய அரசினால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
மட்டுமல்லாது, அதனை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களை வரவேற்று பேசியவர்கள் பிரதேச செயலாளர் ஆகிய நானும், மீனவர் சங்கத்தின் அன்றைய தலைவராக இருந்த மர்கூம் ரஹீம் அவர்களும் மற்றும் ஒரு சிலரும் மட்டுமே இருந்தனர். அன்றைய அரசியல் தலைவர்கள் அந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து நடைமுறைப்படுத்த முடியாமல் தடுத்தனர். அதன் பின்னர் சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் இபாட் நிதியின் மூலம் சிசிடி, மீன்பிடி திணைக்களம், பிரதேச செயலகம், மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய துறை சார் வல்லுனர்கள் குழுவின் பரிந்துரைகலின்படி பரிச்சாத்தமாக மண் மூடைகள் கொண்ட இரு தூண்கள் கட்டப்பட உத்தேசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்திய நிலையில் அதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டடு இன்று தடயம்கூட இல்லாமலுள்ளது பெரும் கவலை தரும் விடயமாகும். இருந்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார மேடையில் பிரதமர் அவர்கள் கூறியபடி சாய்ந்தமருது படகு துறையும் சிறிய படகுகள் மட்டுமன்றி ஏனைய படகுகளும் நிறுத்தி வைக்கக்கூடிய அளவில் கட்டப்படவேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.