கொரோனா அலையில் கடுமையாக இந்தியா பாதித்துள்ளமையினால் இந்தியாவின் அதிக மாநிலங்கள் முழுமையான முடக்கத்தில் சிக்கியுள்ளது. இந்த பாதிப்பினால் அங்கு தங்கியிருந்து இந்திய பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு திரும்பிவர முடியாமல் சிக்கித்தவித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம், வடமாநில பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் என இந்தியாவில் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள கல்விநிலையங்களில் கல்விபயின்று வரும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்கள் பல மாதங்களாக கடுமையாக முயன்றும் இலங்கைக்கு திரும்பிவர முடியாமல் தவித்து வருவதுடன் நாட்டுக்கு திரும்பிவரவென விமான பயணசீட்டுக்கள் முன்பதிவுகள் செய்திருந்தும் அவைகள் இறுதி நேரங்களில் ரத்தாகி வருவதனால் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும், உணவுகளை பெறுவதில் கூட பிரச்சினை இருப்பதாகவும் பல்வேறு சுகாதார நெருக்கடிகளை அனுபவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தங்களின் உயிர்களை பாதுகாத்து கொள்ள தூதரகங்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அவை சாத்தியப்பாடாமல் போனதாகவும் எதிர்வரும் நாட்களில் இந்திய தேசிய கிரிக்கட் அணி இலங்கை அணியுடனான கிரிக்கட் போட்டிக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நிர்கதியாகியுள்ள மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.