கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கோரளைப்பற்றுப் பிரதேச அரசியற் பிரமுகர்கள், கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கோரளைப்பற்றில் நிலவுகின்ற முக்கிய சில பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரதான பிரச்சினைகளின் போது மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதன் போது வாழைச்சேனை வைத்தியாசலையில் நிலவுகின்ற குறைபாடுகள், மற்றும் பிரதேசத்தில் நிலவுகின்ற காணிப்பிரச்சினைகள், பிரதேசத்தின் எல்லைகளில் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள், தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட தற்போது பேசுபொருளாக இருக்கின்ற வாழைச்சேனை வைத்தியசாலை பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலக விடயம் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்நிற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. கட்சி நிலைமைகளுக்கப்பால் மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்காக ஒருமித்து நின்று செயற்படுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக நிற்கின்றோம். ஆனால் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. அவ்வாறு அவர்களும் முன்வருவார்களாக இருந்தால் நாங்களும் தயாராகவுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.