கொவிட்-19 பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக வருமானம் இழப்பு மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை, தனது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் 40ஆவது பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றபோதே முதலவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பயணத்தடை என்று நாடு முடக்கப்பட்டிருந்ததால் எமது பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றனர். இதனால் எமது மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
மத்திய அரசாங்கம் எவ்வாறு மக்களிடமிருந்து வரிகளைப் பெற்று மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றதோ அவ்வாறே உள்ளூராட்சி மன்றங்களும் செயற்பட்டு வருகின்றன. இன்று எமது நாடு பாரிய கடன் சுமையுடன், பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. டொலரின் பெறுமதி கூடிக்கொண்டு செல்கிறது. வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துச் செல்கிறது. அன்னியச் செலாவணியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தினால் வருமானங்களை ஈட்ட முடியாதிருக்கிறது. பல பொருளாதார நிபுணர்கள் இருந்தும் இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசாங்கம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா தாக்கம் காரணமாக எமது மாநகர சபையும் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. மக்களின் கஷ்ட நிலைக்கு மத்தியில் அவர்களிடமிருந்து வரிகளை அறவீடு செய்ய முடியாதிருக்கிறது. வர்த்தகர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய வியாபார உரிமக் கட்டணம் உட்பட ஏனைய வருமானங்களும் தடைப்பட்டிருக்கின்றன. எமது மாநகர சபைக்கு சொந்தமான சந்தையிலுள்ள கடைகளுக்கான வாடகைப் பணத்தைக் கூட அறவிட முடியவில்லை. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட முடக்கம் காரணமாகவே வருமானங்களைத் திரட்டிக்கொள்ள முடியாதிருக்கிறது.
மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை காரணமாக திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற சுகாதாரத் தொழிலாளர்கள் தவிர்ந்த ஏனைய தற்காலிக ஊழியர்களை இடைநிறுத்தியுள்ளோம்.
பணியில் இருக்கின்ற ஊழியர்களுக்கு சமபளம் கொடுப்பதற்கும் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதற்கும் ஏனைய சேவைகளுக்கும் பெருந்தொகைப் பணம் தேவைப்படுகிறது. மாநகர சபையின் இந்த சேவைகளுக்காகவும் நிர்வாக செலவுகளுக்குமாக மாதமொன்றுக்கு குறைந்தது 05 மில்லியன் ரூபாவையாவது செலவிட வேண்டியுள்ளது.
அதேவேளை, மாநகர சபையிலுள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கான மாதாந்த சமபளத்தையும் மாநகர சபையின் நிதியில் இருந்து வழங்கி விட்டு, பின்னரே மாகாண சபையில் இருந்து நாம் அப்பணத்தை மீளப்பெற வேண்டியுள்ளது. அதில் தாமதங்களும் ஏற்படுகின்றன.
எவ்வாறாயினும் வருமானம் இழப்பு மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மாநகர சபையினால் மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளை எவ்வித தளர்வுமின்றி, சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம். அவற்றில் குறைபாடுகள் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்- என்றும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.
இந்த அமர்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.