அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்களின் குரலாக நாங்கள் இருக்கின்றோம். காரைதீவு மக்களின் நில இருப்புகளைத் தக்க வைப்பதற்காக நாங்கள் செயற்படுகின்றோம் என்பதால் என்னை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகப் பல செயற்பாடுகளைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரின் முகநூல் விடயத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் காலகட்டத்தில் பல குழப்பமான விடயங்கள் இடம்பெற்று வருவதை பலரும் அறிந்திருப்பீர்கள். உண்மையிலேயே என்னைக் கொச்சைப்படுத்துவதற்காகவும், பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் பல அரசியற் பிரமுகர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதையிட்டு நான் மனவேதனை அடைகின்றேன். குறிப்பாக நபிகள் நாயகம் தொடர்பாக நான் அவதூறு அறிக்கை விட்டதாக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கௌரவ உறுப்பினர் பைசல் காசிம் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டிருந்தது.
தமிழ் பேசும் இனமாக இரு சமூகங்களும் வாழுகின்ற இந்தப் பிரதேசத்திலே என்னோடு மதத்தலைவர்கள், பள்ளிவாசல் நிறுவாகத்தினர் பலரும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி உண்மை நிலைமையை அறிந்திருந்தார்கள். ஆனாலும் சில இஸ்லாமிய சகோதரர்கள் பல அறிக்கைகள் விட்டதோடு மாத்திரமல்லாமல் பொலிஸ் முறைப்பாடுகளும் செய்திருந்தார்கள். இது தொடர்பில் நான் பொலிஸாரிடம் உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறியதோடு சமுகவலைதளங்களின் ஊடாக என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தேன்.
இந்த விடயம் தொடர்பில் என்னை அணுகி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருக்கலாம். ஆனால் அவ்வாறு விசாரிக்காமல் எனக்கெதிராக அறிக்கைகள் அச்சுறுத்தல்கள் விடுகின்றார்கள் என்றால் என்னை இல்லாதொழிக்க வேண்டும், எனது பதவியைப் பறிக்க வேண்டும் என்று பலரும் எமது கட்சிக்கும் முறைப்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இவ்வாறானவர்களின் உள்நோக்கமே அறிய முடிகின்றது. இதனை எமது தமிழ் சமூகமும் நன்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், எனக்கு வந்த கொலை அச்சுறுத்தல்கள், அவதூறான வார்த்தைகள், எனது மதத்திற்கும் முத்தமிழ் வித்தகருக்கும் வந்த அவதூறான வார்த்தைகள் என்பவற்றை நான் வெளிப்படுத்தவில்லை. சில இனவாதிகள் என்னை பழிவாங்குவதற்காக பல்வேறு சோடினைகளைச் சோடித்து இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியில் பிழையான விடயத்தைப் பகிர்ந்து விட்டார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் அதனை நம்பி இவ்வாறு செயற்படுகின்றார்கள். ஆனால் பள்ளிவாசல் நிறுவாகத்தினர் இவ்விடயத்தில் நியாயமான முறையில் நடந்து இந்த விடயம் தொடர்பில் அமைதியாக இருக்கும் படியும் அறிக்கை விட்டிருந்தார்கள்.
ஆனால் அவர்களுடைய கதையையும் கேட்காது எனக்கான அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகவே தோன்றுகின்றது. தங்களின் அரசியல் இலாபத்திற்காக ஒரு சமூகத்தின் மக்கள் பிரதிநிதியையும், சமூகத்iயும் இவ்வாற விமர்சித்து செயற்படுவதென்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
இந்த முகநூல் பதிவானது என்னால் மேற்கொள்ளப்பட்ட விடயம் அல்ல. ஒருவர் பதிவிட்டு எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அன்று இரவே மௌலவி ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு இவ்விடயம் பற்றித் தெரிவித்தார். அதன் பின்னர் தான் நான் அதனைப் பார்த்தேன். உடனடியாக நான் அதனை அகற்றி. அது தொடர்பிலான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தேன்.
இன்று இது தெடர்பில் பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து நாங்கள் சஹ்ரானின் ஆட்கள், உன்னைக் கொல்வோம், கழுத்தால் அறுத்து ஆற்றில் போடுவோம் என்று பல்வேறுபட்ட விடயங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் ஒன்றைமட்டும் விளங்கிக் கொள்ள வேண்டும். கோவிலை இடித்தே பள்ளிவாசலைக் கட்டினேன், வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் அறிக்கை விட்டவர்களுக்கெதராக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை. அதையும் விட என் தொடர்பான இப் பிரச்சனையில் இப்பதிவை இட்டவர் வேறு ஒருவர் அவருக்குக் கூட எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. ஆனால், எனக்கு மாத்திரம் இவ்வாறான முறைப்பாடுகள், கொலை மிரட்டல்கள், பாராளுமன்றத்தில் பேச்சு என்பன இடம்பெறுகின்றன என்றால் அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்களின் குரலாக நாங்கள் இருக்கின்றோம். காரைதீவு மக்களின் நில இருப்புகளைத் தக்க வைப்பதற்காக நாங்கள் செயற்படுகின்றோம் என்பதால் என்னை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகப் பல செயற்பாடுகளைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பிரச்சினையில் தொடர்ந்தும் பிரச்சினை எடுக்காமல் ஒரு தீர்வினைக் காண வேண்டும் என்று எண்ணியிருந்தால் இருதரப்பிலும் இருந்து மதகுருமார்கள், பெரியவர்களை இணைத்து ஒரு மேசையில் நாங்கள் பேசியிருந்தால் இவ்விடயத்தில் உண்மைத்தன்மை சுமூகமாகக் கண்டறியப்பட்டிருக்கும். ஆனால் அரசியல் இலாபபத்திற்காக உலக முஸ்லீம்களை கொந்தளிக்கச் செய்த இந்தச் செயற்பாடு இன்று கட்டுப்பத்த முடியத நிலைக்கு வந்துள்ளது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளைச் செய்பவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்பிரச்சனைக்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இந்த விடயத்தில் பள்ளிவாசல் தலைவர்கள் சொல்லும் விடயத்தைக் கேட்டு நடந்தால் இருக்கும் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அரசியல் நோக்கத்திற்காகவும், என்னைப் பழிவாங்குவதற்காகவும் இரு சமூகங்களுக்கிடையில் இனமுருகலை ஏற்படுத்தாதீர்கள்.
எனக்கு வரும் அச்சுறத்தல்களை வெளியிட்டால் எனது சமூகமும் கெதித்தெழும் வாய்ப்பிருக்கின்றது. எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. இவ்வாறு அச்சுறுத்தல்களை மேற்கொள்பவர்கள் யார்? இவர்களுக்குப் பின்னால் இயங்குகின்ற குழுக்கள் யார்? என்பன கண்டறியப்பட வேண்டும்.
இப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் சரியான முறையில் பங்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும் சமமான சேவைகளைச் செய்து வருகின்றேன். எனவே தொடர்ச்சியாக எம்மை அடக்கியாள்வதற்கும், அடிமைக்குள்ளாக்குவதற்கும் செயற்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் நீதியும் சட்ட ஒழுங்கும் சரியான நடைமுறையில் செயற்படும் என்று நம்புகின்றேன்.
நபிகள் தொடர்பான விடயம் எனது முகநூலில் இன்னொருவரால் ஒரே ஒரு தடவைதான் பகிரப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்தப் பதிவை இலட்சக் கணக்கான மூகநூல்களில் உங்களுக்கூடாகவே அது கூடியளவு பகிரப்பட்டிருக்கின்றது. எனவே நபிகள் தொடர்பில் நான் அவதூறு பகிரவில்லை. உங்களால் தான் அவதூறு பரப்பப்பட்டிருக்கின்றது எனபதையும் இதில் குழப்பம் விளைவிக்க முற்படும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.