வைத்தியசாலைகள் நிரம்பிவழிகின்றன: ஒட்சிசன் இன்று பெரும்சவால்!ஆயிரம் நோயாளிகள்: உள்ளது 500கட்டில்கள்: மீதி 500பேர் தரையில்..

‘நாட்டில் வேகமாகப்பரவிவரும் கொவிட் நோய்த்தாக்கத்தினால் கல்முனைப்பிராந்திய வைத்தியசாலைகள் கொவிட்நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன.
 
 இன்றையநிலையில் 1000நோயாளிகள் உள்ளனர். ஆனால் இருப்பதோ 500கட்டில்கள். மீதி 500நோயாளிகளும்  தரையில் அமர்ந்து சிகிச்சைபெறவேண்டியுள்ளது. ஆதலால் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.எனவே ஒருவாரத்தில் கட்டில்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கவேண்டியுள்ளது.’
 
இவ்வாறு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குண.சுகுணன் கல்முனைப்பிராந்திய சமகால கொவிட் நிலைவரம் தொடர்பாகவும் தாம் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவசரதேவைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கும்போது தெரிவித்தார்.
 
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் (டிசிசி)கடந்த ஆறுமாதங்களின் பின்னர் நேற்றுமுன்தினம் (16) திங்கட்கிழமை ‘சூம்’ தொழினுட்பத்தில் நடைபெற்றபோது கல்முனை அலுவலகத்திலிருந்தவாறே புள்ளிவிபர காணொளி ஆதாரத்துடன் சகலவிடயங்களையும் புட்டுப்புட்டுவைத்தார்.
 
திங்களன்று  ‘சூம்’; தொழினுட்பத்தின் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் திணைக்களத்தலைவர்கள் பிரதேசசெயலாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் அவரவர் அலுவலகங்களில் இருந்து இக்கூட்டத்தில் ‘சூம்’ முறையில் கலந்துகொண்டனர்.
 
அங்கு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குண.சுகுணன மேலும் விபரிக்கையில் தெரிவித்ததாவது:
 
எமது கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 5000பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர். 106மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. சமகால உயிர்ப்புள்ள நோயாளிகளாக 1000பேருள்ளனர்.
சராசரியாக தினமும் 100தொற்றுக்களும் 2மரணங்களும் ஏற்பட்டுவருகின்றன. தடுப்பூசி தாமதமானதன்விளைவு இது.
 
எமது பிராந்தியத்திலுள்ள 07ஆதார வைத்தியசாலைகளில் கொவிட்பிரிவுக்கென ஆக 200கட்டில்களே உள்ளன. இடைத்தங்கல்நிலையங்களில் 370கட்டில்கள் உள்ளன. கட்டில்கள் அனைத்திலும் நோயாளிகள் நிறைந்திருப்பதால் இடநெருக்கடி சிக்கல் தோன்றியுள்ளது.
குறிப்பாக கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  சகல கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் சிகிச்சைநிலையங்கள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பிவழிவதால் சுமார் 500நோயாளிகள் இடமில்லாமல் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப்பிராந்தியம் மீண்டும் கதிகலங்கிநிற்கும் நிலை எழுந்துள்ளது.
 
எமது பிராந்தியத்தில் அதிஆபத்துநிறைந்த பிரதேசங்களாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கல்முனை வடக்கு நிந்தவூர் திருக்கோவில் பொத்துவில் ஆகியன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
 
சவாலை எதிர்கொள்ளும் திட்டங்கள்!
சமகாலத்தில் சடுதியாக அதிகரித்துவரும் நோயாளிகளை கவனித்து சிகிச்சையளிக்க ஆதார வைத்தியசாலைகளில் கட்டில்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கவேண்டியுள்ளது. இன்னும் ஓரிருவாரங்களில் அதனைச்செய்வோம்.
 
கொவிட் நோயாளிகள் அதிகரித்துக்கொண்டுபோவதால் காரைதீவு சாய்ந்தமருது வைத்தியசாலைகளின் ஒரு பகுதியை  கொவிட் சிகிச்சைநிலையமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். நிந்தவூர் வைத்தியசாலையை பூரணமாக கொவிட் வைத்தியசாலையாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதேவேளை இடைத்தங்கல் நிலையங்கள் முறைமையை ஒழித்து அவற்றையும் சிகிச்சைநிலையங்களமாக மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது குணங்குறிகளற்ற நோயாளிகள் அந்தந்த சுகாதாரவைத்திய அதிகாரி கண்காணிப்பில் இனிமேல் வீடுகளில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
 
அரசாங்கத்தின் உத்தரவின்படி அதற்கான பயிற்சியை எமது உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளோம். அரசின் உத்தரவு வந்ததும் அடுத்தவாரமளவில் வீடுகளில் தங்கவைத்து பராமரிக்கின்ற செயற்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
அண்மைக்காலமாக கொவிட் தொற்றுக்குள்ளாவோரில் 10வீதமானோர் வைத்தியசாலை சிகிச்சைநிலையங்களில் அனுமதிக்கப்பட்டுவந்தனர். ஆனால் கடந்த 3தினங்களாக 50வீதமானோர் இவ்விதம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
 
மேலும் 3லட்சம் தடுப்பூசிகள் தேவை!
தடுப்பூசி வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் எமது பிராந்தியத்தில் தொற்றின்வேகமும் மரணவீதமும் அதிகரித்துவருகிறது.எமக்கு இறுதியாக்கிடைத்த தடுப்பூசிகளைக்கொண்டு  முதலாவது டோஸ் இதுவரை 92வீதமானோர்களுக்கு ஏற்றியுள்ளோம்.
 இதுசாதனையாகக்கருதப்பட்டது. எனினும் 60வயதுக்கு மேற்பட்ட சிலர் தடுப்பூசிகளைப் பெறாதகாரணத்தினால் மரணவீதம் அதிகரித்துவருகிறது.
 
இந்த டிசிசி கூட்டமானது எஞ்சிய தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுகிறேன். முதலாவது டோஸ் நிறைவுசெய்ய 50ஆயிரம் ஊசிகளும் இரண்டாவது டோஸ் ஆரம்பிக்க 2லட்சத்து 40அயிரம் ஊசிகள் தேவைப்படுகின்றன. முதலாவது டோஸ் ஏற்றி 3வாரங்கள் கடந்துள்ளன. எனவே  இரண்டாவது டோஸ் இன்னும் ஒருவார காலத்தில் ஏற்றப்படவேண்டும்.
அதனிடையே பொதுமக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தமும் மறைமுகமாக ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நிலைமையையுணர்ந்து இரண்டாவது டோஸ் ஏற்றும்வரை  மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
 
இன்று ஒட்சிசன் பெரும் சவால்!
எமது கல்முனைப்பிராந்தியத்தில் ஒட்சிசன் இன்று பாரிய சவாலாக மாறியுள்ளது. அம்பாறைப்பிராந்தியத்தில் மகாஓயாவில் ஒட்சிசன் தயாரிப்பு நிலையமுள்ளது. துரதிஸ்டவசமாக எமது கல்முனைப்பிராந்தியத்தில் மாகாணசபைக்கு உட்பட்ட வைத்தியசாலை எதிலுமே இந்த வசதிகள் இல்லை.
 
ஆக மத்தியஅரசின்கீழுள்ள அஸ்ரப் ஆதாரவைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் மட்டுமே ஒட்சிசன் தயாரிப்பு நிலையங்களுள்ளன. அது அவர்களின் தேவைகளுக்கு மாத்திரமே போதுமானது. ஆக ஒட்சிசன் தாங்கி  எமது பிராந்தியத்தில் இல்லை.
 
எனவே எமது பிராந்தியத்திற்கு 2 ஒட்சிசன் தாங்கிகள் வழங்கப்படவேண்டும். அரசாங்கம் விரைவில் இந்தியாவிலிருந்து 190தொன் எடையுள்ள ஒட்சிசன் தாங்கிகளை வரவழைக்கவுள்ளது. எமக்கு 12மில்லியன்ருபா மதிப்பீட்டில் 6ஆயிரம் லீற்றர் கொள்ளவுள்ள தாங்கிகள் தரப்பட்டால் வருகின்ற சவாலை எதிர்கொள்ளலாம்.
 
வைத்தியசாலைகளுக்கென பாரிய ஒட்சிசன் தாங்கிகள் தேவை. அதற்கு 65மில்லியன் ருபா தேவையாகும். ஒட்சிசன் இல்லாவிடில் எமது முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிவடையவேண்டிநேரிடும். இது கவலைக்குரியது.
அதேவேளை மருத்துவஉபகரணங்களும்  கட்டில்கள் உட்பட தேவையாகின்றன. மல்டிறீடர்மொனிற்றர், ஒக்சிசென்றியேற்றர் ,ஹைபுளோ ஒக்சி மெஷின் ஆகியன தேவையாகின்றன.
நாம் எமது சுகாதாரஅணியினருடன் இரவுபகல்பாராமல் சேவையாற்றி கொவிட்டிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவேண்டுமானால் மேற்சொன்னவசதிகளை காலதாமதமின்றி வழங்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Related posts