விமர்சனங்களை தவிர்த்தும்,விசமத்தனமான பேச்சுக்களையும்,குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான ஒட்சிசன் வழங்கும் நவீன இயந்திர பொருட்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையிலான நிர்வாகத்திடம் இன்று வெள்ளிக்கிழமை(3)கையளித்தார்.
எமது நாட்டிலே வேகமாக பரவிவரும் கொரோனோ தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.விமர்சனங்களை தவிர்த்து அரசாங்கத்திற்கு தொற்றை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று நிகழ்வின்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
கடந்த கொவிட்-19 தொற்றின் முதலாம் இரண்டாம் அலையை வெற்றி கொண்டு இருந்தாலும்´நாட்டுக்குள் தற்போது, ´டெல்டா´ வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.இது பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சவால் மிக்க தருணத்திலும்,நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.குறிப்பாக இந்த தருணத்தில் சுகாதாரத் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும்,சுகாதார உத்தியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
நாட்டில் தற்போது முடக்க நிலை காணப்பட்டபோதிலும், சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் அபிவிருத்தி குறித்து பல வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளை இந்த பிரதேசத்துக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் முன்மொழிந்து உள்ளேன்.மிக விரைவில் அனைத்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.தற்போது மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஒட்சிசன் தட்டுபாடு தொடர்பில் தீர்வு பெற்றுக் கொடுக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என தெரிவித்தார்.