யுனிசெப் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் மூலம் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் செரி நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் சிநேக மாநகரம் செயற்திட்டமானது ஒரு வருடத்தைக் கடந்துள்ளது.
கடந்த வருடம் செரி நிறுவனத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோருக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சிறுவர்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமும் சமூக அக்கறை கொண்டு செயற்படும் உள்ளுராட்சி நிறுவனமான மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து மாநகர எல்லைக்குட்பட்ட 20 வட்hரங்களையும் அடிப்படையாகக் கொண்டு சிறுவர் சிநேக மாநகரம் செயற்திட்டம் உருவாக்கப்பட்டது.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கப்பட்டது. பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர் சினேகபூர்வ மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகர சபைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இத் திட்டம் அமையப்பெற்றது.
அத்துடன் மாநகருக்குள் வாழும் சிறுவர்களின் திறன் விருத்தி சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் ஊடாக அவர்களை எதிர்காலத்தில் சமுகப் பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுத்தல் மற்றும் மாநகருக்குள் வதியும் பெற்றோர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கத்தினை வெகுவாக அதிகரிப்பதன் மூலம் பெற்றோர் அதிக நேரத்தினை தமது பிள்ளைகளுடன் போக்குவதற்கான செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்றனவற்றிற்காக முதற்படியாக மாநகர பாலர் பாடசாலைகள், சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றினை மாற்றியமைப்பதற்கான திட்டங்களும் இதன்மூலம் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் கொவிட் 19 சூழ்நிலைகளுக்குள்ளும் பல்வேறு செயற்திட்டங்கள், அழகுபடுத்தும் செயற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாநகரசபை, கல்வி, சுகாதாரத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நகர மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 281 முக்கிய அதிகாரிகளைச் சென்றடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் வளர்ச்சி தொடர்பான சமூக சேவைகள் உட்கட்டமைப்பு செயற்பாட்டில் 35 உட்கட்டமைப்பு செற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மருத்துவ சிகிச்சையகங்கள் தாய்ப்பாலூட்டும் வசதிகளோடும், விளையாட்டுப் பகுதி, விளையாட்டுப் பொருட்பெட்டி மற்றும் தாய் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டும் செய்திகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இதே விiளாயட்டு அம்சங்களுடன் காந்தி பூங்கா, மிதி வண்டிப் பாதைகளுடன் கூடிய முதலாவது வளர் இளம் பருவத்தினருக்குரிய பூங்காவாக அமைக்கப்பட்டுள்ள லொயிட்ஸ் பூங்கா, வாவிக்கரைப் பூங்கா, மண்முனை வடக்குப் பிரதேச செயலக சிறுவர் விளையாட்டுப் பூங்கா, அரசாங்கத்துக்குச் சொந்தமான சிறுவர் பாதுகாப்பு இல்ல பூங்கா போன்றனவும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நகர அழகுபடுத்தல் செயற்திட்டத்தின் கீழ் பிரதான வீதியின் மையப்பகுதிகளில் பூமரங்கள் நாட்டுதல், வர்ணப்பூச்சு, சித்திரங்கள் மூலம் அழகுபடுத்தல், பாடசாலைகளுக்கருகில் சிறுவர் சிநேக பாதசாரிக் கடவைகள் போன்றனவும் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர் காடுகள், நகரைப் பசுமையாக்க மரங்கள் நடல் போன்ற செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு, போன்றனவற்றில் சிறுவர் சிநேக பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் அரசாங்கத்துக்குச் சொந்தமான பாதுகாப்பான இல்லத்தில் உள்ள உட்புற நூலகத்தை வர்ணமயமாக்கி மேம்படுத்தும் செயற்திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 பாடசாலைகளில் வர்ண வடிவமைப்புகளுடன் கூடிய கல்விசார் செய்திகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் போசாக்கு குறைபாட்டுப் பிரச்சனைகளை ஒழிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சமூக பண்ணை செயற்பாடுகளில் 50 வீதமான முன்னேற்றமும் காணப்பட்டுள்ளது.
அழகுபடுத்தல், புனரமைப்பு செயற்பாடுகளைப் போன்றே சமூக விழிப்புணர்வு மற்றும் கொவிட் 19 நிலைமைகளுடன் தொடர்புடைய செயற்திட்டங்களும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30 இடங்கள் தொரிவு செய்யப்பட்டு அங்கு கைகழுவும் பகுதிகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோன்று பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினருடன் கடமையாற்றும் கொவிட் பணிக்குழுவினருக்கு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், சுமார் 555க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்களுக்கு அவர்களது வளர்ச்சிக்கு முக்கியமான பல்வேறு தலைப்புகளிலான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி சிறுவர் நேய மாநகரம் செயற்திட்டம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து ஒருவருட காலத்திற்குள் இத்தனை அம்சங்களுடன் கூடிய பாரிய செயற்திட்டங்கள் நடைறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட அளவிடக் கூடிய நன்மைகள் மட்டுமல்லாது, பல அளவிடப்படமுடியாத நன்மைகளும் சிறுவர்களைச் சென்றடைந்துள்ளன.
யுனிசெப் நிறுவனத்தின் நிதி மற்றும் செரி நிறுவனத்தின் பாரிய ஒத்துழைப்புகள் இல்லாமல் மேற்படி செயற்திட்டங்கள் சாத்தியமாவது கடினமாகவே இருந்திருக்கும். அதே போன்று மட்டக்களப்பு மாசநகரசபை, அரச துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் போன்றனவற்றின் ஒத்துழைப்பினாலும் இம் முன்னேற்றகரமான செயற்பாடு செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.