அதிபர், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கோரிக்கை
நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றுகின்ற அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை சீர் செய்ய வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.கடமை உணர்வுடைய அவர்களின் அர்ப்பணிப்பு போற்றப்பட வேண்டியது மாத்திரமல்லாது பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் தீர்க்க தரிசனமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையினை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் முன் வைத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் அதிபர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது அவர்கள் அதிகளவான எதிர்பார்பினை கேட்க வில்லை ஏனைய அரசாங்க உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் பெறுகின்ற சம்பளத்திற்கு நிகராகவே அவர்களின் கோரிக்கை அமைந்திருக்கின்றது.
நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கமானது பல வருட காலமாக அதிபர் ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பான விடயத்தில் எதுவிதமான கரிசனையும் காட்டியதாகத் தெரியவில்லை மாறாக நாட்டின் அபிவிருத்தியில் முதுகெழும்பாக காணப்படுகின்ற கல்வியினை சிறந்த வழிகாட்டலுடன் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் பாரிய பொறுப்பு அர்ப்பணிப்பான ஆசிரியர்களைச் சாரும் அவர்களின் கோரிக்கைக்கு பதில் வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கமானது பொருளாதாரத்தில் மட்டுமல்லாது மாணவர்களின் கல்வியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் மாணவர்களின் கற்றல் செயற்பாடு சார்ந்த விடயத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் அமைதல் வேண்டும்.
நாட்டில் நாளாந்தம் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பால்மா உட்பட சீமெந்து , கட்டிடப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.அவ்வாறான நிலையில் மிகக் குறைந்தளவான வேதனம் பெறுகின்ற ஆசிரியரினால் வீடு ஒன்றினை நிர்மாணிப்பது இலகுவான விடயமல்ல அவர்களுக்கும் எதிர் பார்ப்புக்கள் இருக்கின்றன.நியாயமான ஆசிரியர்களின் கோரிக்கைக்கு சிறந்த தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும்.
நாட்டில் தொழில் நிமிர்த்தம் வேதனம் பெறுகின்ற ஏனைய உத்தியோகத்தர்கள் பல போராட்டங்களை முன்னிலைப் படுத்தி வெற்றி பெறுகின்ற நிலையில் ஆசிரியர்கள் போராட்டமானது பல வாரங்கள் கடந்துள்ள நிலையில் இழுபறித் தன்மையில் காலங்கடந்து செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிள்ளைகளின் கல்வி தொடர்பாக சமுகத்தில் வகை கூறுகின்ற பாரிய பொறுப்பு மாத்திரமல்லாது தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற சாதாரண மாணவனை பல்துறை சார் வல்லுனர்களாக சிறந்த வழிகாட்டலுடன் மாற்றியமைக்கின்ற மனித நேயம் கொண்ட, தியாக உணர்வுள்ள ஆளுமை ஆசிரியர்களுக்கு உரித்துடையது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்தளவான வேதனம் பெறுபவர்கள் ஆசிரியர்கள் என்பதனை உணர்ந்து அரசாங்கமானது அவர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று நடுநிலையோடு தீர்வினை வழங்க வேண்டுமென கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.