மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மூன்று குளங்களின் புனரமைப்புக்கும், மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காகவும் 53 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாரிய அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பகுதிக்குரிய அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை(16)மாலை மட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இங்கு மூன்று குளங்களின் புனரமைப்பு பற்றியும் அதனை அண்டிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நீரியல் வளர்ப்பு பூங்கா பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம் 1100 ஹெக்டெயர் பகுதியில் இது மேற்கொள்ளப்படுவதற்கு நிதிஅமைச்சு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதுடன் ஏற்றுமதிகளுக்காக இறால் மீன் வளர்ப்பு மேற்கொள்ள 53 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடபட்டது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் வாகரை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொணடனர்.