வருத்தமில்லாத சமூகத்தை உருவாக்குவது, பசுமையான நிலத்தை சூழலை உருவாக்குவதே எமது திட்டங்கள். இவ்வகையான உயர்ந்த திட்டங்களுக்கு மக்களும் ஊடகங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், வந்தாறுமூலை, களுதாவளை பிரதேச மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்த்திருத்த ஆணைக்குழு அதிகாரி விமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் ஒரு கட்ட நிகழ்வாக களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், காணி சீர்திருந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர், பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே காணி தொடர்பிலான பல பிரச்சினைகள் இருக்கின்றது. அவற்றைத் தீர்ப்பதற்கு நாங்கள் பாடுபட வேண்டும். இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் ஊடகங்களைப் பார்க்கின்ற போது ஏதே சிங்களவர்களுக்கு மாத்திரம் காணி வழங்குவது போன்ற பிழையான தகவல்களை வெளியிடுவதாக இருக்கின்றது. அவர் தகவல்களை எப்போதும் பிழையாகவே தான் வெளியிடுபவர். எமது நாட்டிலே, எமது மாவட்டத்திலே எல்லோருக்கும் காணி இருக்க வேண்டும். தேவநாயகம் ஐயாவின் காலத்தில் வளைவாடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். இவை எல்லோருக்கும் தெரிந்த விடயம். இங்கிருக்கின்ற நிருவாகிகளும், அரசியல்வாதிகள் வரலாறு தெரியாமல் நடக்கக் கூடாது.
மக்களிடம் இருக்கும் காணிப் பிணக்குகளை தீர்த்துக் கொடுக்க வேண்டும். அது சிங்களவர்களாக, தமிழராக, முஸ்லீமாக இருக்கலாம். ஆனால் திட்டமிட்ட குடியேற்றங்கள் என்றால் அதனை நாங்கள் தடுப்போம். எனவே பொறுப்பான ஊடகங்ககள் எல்லாவற்றிற்கும் இனவாதத்தைக் கக்குவது தவறான விடயம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
நாங்கள் மிகப் பெரிய கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு மிகவும் போராடி, வருமானம் குறைந்திருக்கும் வேளைகளிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி எமது ஜனாதிபதி அவர்கள் பாரிய விமர்சனங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கின்றார்.
இதேவேளை ஆசிரியர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் உரப்பிரச்சனை என்று சொல்லி போராட்டம் நடத்துகின்றார்கள். இங்கும் தேசியம் பேசுபவர்களும் கிழம்பியிருக்கிறார்கள். நிச்சயமாக நாங்கள் அவற்றையெல்லாம் முடிவுறுத்தி பெரும் விளைச்சலை ஏற்படுத்தவதற்கான நடவடிகக்கைகளை மேற்கொள்வோம். கடவுளும் எங்களுக்குத் துணை செய்வார். ஏனெனில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கும், நிலத்திற்கும், இயற்றைக்கும் கொடுக்கின்ற கொடையாகவே அமையும்.
வருத்தமில்லாத சமூகத்தை உருவாக்குவது, பசுமையான நிலத்தை சூழலை உருவாக்குவதே எமது திட்டங்கள். இவ்வகையான உயர்ந்த திட்டங்களுக்கு மக்களும் ஊடகங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவரும் இணைந்து இத்திட்டத்தை அமுலாக்க வேண்டும். இது விவசாய மாவட்டம் இயற்கை விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.