மாநகர ஆணையாளரின் அடாவடித்தனமான செயற்பாடுகளை ஆளுநருக்கு மாத்திரமல்லாமல் பிரதமர், உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் பாராளுமன்றத்திலும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையென்றால் இந்த ஆட்சியலே மக்கள் எவ்வாறு நீதி நியாயங்களைக் காண முடியும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஆளுநர் மற்றும் ஆணையாளருக்கு எதிரான ஆர்;ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஓராண்டுகளாக இந்த மாநகரசபைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஊழல் மிகுந்த ஒரு ஆணையாளர் வந்த நாள் தொடங்கி எங்களுடைய ஆட்சியை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றார். எங்கு பார்த்தாலும் அதிகாரத் துஸ்பிரயோகம். மக்கள் ஆட்சியை மதிப்பதும் இல்லை. எங்களால் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றச் சம்மதிப்பதும் இல்லை. அவர் அவரோடு சேர்ந்து செயற்படுபவர்கள் சேர்ந்து அவர்களுக்கு ஏற்ற விதத்தில் செயற்படுகின்ற ஒரு நிலைமையே காணப்படுகின்றது.
கடை கடையாக மின்குமிழ் கேட்கின்றார்கள். இதுவரை காலமும் அவ்வாறு இடம்பெற்றதில்லை. மக்களின் நாய்க்கூடுகளைப் பிடித்து வருகின்றார்கள். பிடித்து வந்த நாய்க்கூடுகளைக் காணவில்லை. மரக்கறித் தோட்டம் போடுகின்றார். அதற்கான நீர்;பாசனச் செலவு ரூபா 81000, ஆனால் அதன் மூலம் இதுவரைக்கும் மாநகரசபைக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை. வீதியோர வியாபாரிகளை எச்சரிப்பதும், மீனவர்களின் வலைகளைப் பறிப்பதும் போன்ற செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் எங்களிடம் அழுது மன்றாடுகின்றார்கள். அதுமட்டுமல்லாது மாநகரசபை மண்டபத்தில் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளார்.
இங்கு நிலையியற் குழுக்களின் நடவடிக்கைகளில் கூட தடை விதிக்கப்படுகின்றது. எந்தவொரு நிலையியற் குழுக்களைக் கூட்டுவதற்கு அனுமதிப்பதும் இல்லை, உரிய அதிகாரிகளை அனுப்புவதும் இல்லை. இங்கிருக்கும் உழியர்களைப் பயமறுத்தி அடிபணிய வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
எனவே தான் கடந்த ஓராண்டுகளாக இவ்வாறான அதிகாரத் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன என்பதை கிழக்கு மாகாண அளுநருக்கு எடுத்துச் சொன்னோம். அவர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து இதுவரையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர் என்ன செய்தாலும் அங்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.
எனவே ஆளுநர் அவர்கள் இந்த அடாவடித்தனமான செயலை இதுவரைக்கும் கண்டும் காணாதவராக இருந்து எமது மாநகர மக்களைப் பரிதவிக்க வைத்திருக்கின்றார். இந்த சம்பவங்களையெல்லாம் ஆளுநருக்கு மாத்திரமல்ல அரசாங்கத்தின் பிரதமர், உள்ளுராட்சி அமைச்சர் மற்றறும் பாராளுமன்றத்திலும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையென்றால் இந்த ஆட்சியலே மக்கள் எவ்வாறு நீதி நியாயங்களைக் காண முடியும்.
ஏனவே மேற்படி விடயங்களை மக்கள் மாத்திரமல்லாமல் அரசாங்கத்திற்கும் கொண்டு சென்று இந்த மாநகரசபையில் நிம்மதியான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.