கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக வேலைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள தென்கிழக்கு கல்விப் பேரவை, இது குறித்து கிழக்கு மாகாண ஆளுனர் உடனடியாக அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பேரவையின் தலைவர் ஏ.எல்.எம்.முக்தார், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரைத் தவிர சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவரும் உதவிச் செயலாளர்கள் இருவரும் கடமையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த அமைச்சில் ஒரு சிரேஸ்ட உதவிச் செயலாளரும் ஒரு உதவிச் செயலாளரும் ஒரு பதில் உதவிச் செயலாளரும் கடமையில் உள்ளனர்.
நிருவாக ஏற்பாடுகளுக்கமைய ஒரு விடயம் உதவிச் செயலாளர் ஊடாக சிரேஸ்ட உதவி செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் செயலாளருக்கு இறுதி ஒப்பத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சிரேஸ்ட உதவிச் செயலாளர் ஒரு சட்டத்தரணி என்பதனால் கல்வி அமைச்சு சார்பில் நீதிமன்றம், மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் ஆஜராகி வருகிறார்.
அதேவேளை கடமையில் உள்ள ஒரு உதவிச் செயலாளர் அமைச்சுக்கு சமுகமளிப்பதில் அக்கறையின்றி உள்ளார். இந்த நிலையில் கல்வி அமைச்சின் பணிகள் யாவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது.
எனவே, கிழக்கு மாகாண கல்வியமைச்சில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக அமைச்சில் தங்கியிருந்து கடமையாற்றக் கூடிய சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஒருவரும் நியமனம் செய்யப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.