மனித நேய செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அச்சுறுத்துவது இலங்கை அரச படைகளினது இன அடக்கு முறையின் அதி உச்ச நிலையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவைத் தொடர்ந்து மற்றுமொரு ஊடகவியலாளர் யாழ் பருத்தித்துறை பொலிஸாரினால் மிரட்டப்பட்டதான சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 02ம் திகதி யாழ் பருத்தித்துறை நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் ஊடகவியலாளர் சுலக்சன் இலங்கை பொலிஸாரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவமானது மனித குளத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
மனித நேய செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அச்சுறுத்துவது இலங்கை அரச படைகளினது இன அடக்கு முறையின் அதி உச்ச நிலையாக நாம் கருதுகின்றோம். காலம் காலமாக ஊடகவியலாளர்கள் ஆயுத முனையில் சுட்டுப் படுகொலை செய்வதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தபடுவதும் உண்மைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசாங்கத்தின் அறாஜக தன்மையை காட்டி நிற்கின்றது.
நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றம் அருகாமையில் உள்ள தேனீர் கடை மற்றும் வாகன தரிப்பிடத்தில் பொது மக்களுக்கும் தேனீர் கடை உரிமையாளருக்கும் பருத்தித்துறை பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சுலக்சன் மற்றும் பொது மகன் ஒருவரையும் வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வேண்டாம் என விரட்டி உள்ளனர் பின்னர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்குள் விடுமாறு கூறி பொலிஸ் நிலையத்துக்குள் ஊடகவியலாளரை வர வைத்து பொலிஸார் ஊடகவியலாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர் தேனீர் கடை உரிமையாளரோடு பேச வேண்டாம் அப்படி பேசினால் பொலிஸ் நிலையத்துக்குள் வந்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக ஊடகவியலாளர் மீது குற்றம் சுமத்தபடும் என பொலிஸார் மிரட்டியுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரச படைகளினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசம் மற்றும் மனித நேய அமைப்புகள் கவனம் செலுத்தி இலங்கை அரசாங்கத்தின் மீது காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வேண்டி நிற்கிறோம்.