Jayarushanth: தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ருமேனிய நாட்டின் பானட் மலைத்தொடர்களில் இருக்கிறது அழகான எபின்தல் கிராமம். இங்கே செக் இன மக்கள் வாழ்கிறார்கள். உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக இந்தக் கிராமம் விளங்குகிறது. இங்கே காவல் நிலையம் கிடையாது. இங்கு குற்றங்களே பெரும்பாலும் நடைபெறுவதில்லை.
அதிலும் திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாதாம். இங்குள்ள மக்கள் அமைதிக்கும் மரியாதைக்கும் பெயர் பெற்றவர்கள். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும் பணமும் வைக்கப்படுகின்றன.
ரொட்டி கொண்டு வருபவர் பையில் உள்ள குறிப்பைப் படித்து, தேவையான ரொட்டிகளை வைத்துவிட்டு, பணத்தை எடுத்துக்கொள்வார். மீதிப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால் அந்தப் பையிலேயே போட்டு விடுவார்.
வீட்டின் உரிமையாளர்கள் வீடு திரும்பும்போது ரொட்டிகளை எடுத்துக் கொள்கிறார்கள். “1989-ம் வருடம் எங்கள் கிராமத்தில் இருந்த ரொட்டிக் கடை மூடப்பட்டது. அதனால் நாங்கள் 20 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரத்துக்குச் சென்றுதான் ரொட்டி வாங்கிக் கொண்டிருந்தோம். 1996-ம் வருடம் நகரிலிருந்து ரொட்டிகளை வரவழைக்கும் திட்டத்தை ஆரம்பித்தோம். அன்று முதல் பையில் பணத்தையும் குறிப்பையும் போட்டு வாசலில் வைத்துவிடுவோம்.
ரொட்டிக் கடைக்காரர் தேவையான ரொட்டிகளை வைத்துவிடுவார். கடந்த 22 வருடங்களாக இந்த நடைமுறை இருக்கிறது. இதுவரை ரொட்டியோ, பணமோ திருடு போனதே இல்லை. இங்கு வசிக்கும் மக்களிடத்தில் பொருளாதாரத்தில் வேறுபாடு இருந்தாலும் நற்பண்புகளில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். எல்லோரும் உழைக்கிறோம். அவரவர் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைப் பெறுகிறோம். நிம்மதியாக வாழ்கிறோம். அனுமதியின்றி இன்னொருவர் வீட்டுக்கோ, விளைநிலத்துக்கோ யாரும் செல்ல மாட்டார்கள்.
சொந்தம் இல்லாத ஒரு பொருள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இங்கே உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறது” என்கிறார் 75 வயது எபின்தல் கிராமவாசி ஒருவர். “நான் இந்தக் கிராமத்துக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றன. கார் நிறுத்தும் இடத்தில் ஏராளமான பொருட்களைப் போட்டு வைத்திருக்கிறேன்.
அனைத்தும் பயன்படக்கூடியவை. கதவு கூட இல்லை. ஆனால் இதுவரை எதுவும் திருடு போனதில்லை. யாருக்காவது உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்தால், தாமாக உதவும் பண்பும் இங்கே இருக்கிறது. மிக நாகரிகமான மக்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்களுடன் வசிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கூறுகிறார் பாதிரியார் வாக்லாவ் மாசெக்.