மட்டக்களப்பில் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்சித்திட்டம் சுபவேளையில் ஆரம்பம்

அரசின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் 1643 வேலைத்திட்டங்கள் இன்று (04) சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
 
மண்முனைப்பற்று பிரேதேச செயலகப்பிரிவிற்கான பிராதான நிகழ்வு மண்முனை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி. என். சத்தியானந்தியின் ஏற்பாட்டில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கலைநடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ. சுரேந்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
 
இதன்போது இக்கிரம சேவகர் பிரிவிற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம் 2.5 செலவில் திருத்த வேலைக்கான அடிக்கல் அதிதிகளால் நட்டு வைக்கப்பட்டது. மேலும் வாழ்வாதார வேலைத்திட்டங்களில் கோழி வளர்ப்பிற்காக 15 பயனாளிகளுக்கும், ஒரு இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் 4 பயனாளிகளுக்கும், 3 இலட்சம் பெறுமதியான வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு பயனாளிக்கும், ஒரு இலட்சம் பெறுமதியான வீடு திருத்த Nலைக்காக 4 பயனாளிகளுக்குமான அனுமதிக் கடிதங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
 
அரசாங்க அதிபர் கருணாகரன் இங்கு கருத்து தெரிவிக்கையில் நாடுபூராகவும் ஒரு இலட்சம் வேலைத்திட்டங்கள் ஒரே தடவையில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. இது இலங்கை வரலாற்றில் ஒரு புதுவிதமான திட்டமாகும். எமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1643 திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவற்றில்  ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு குறைந்தது 5 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றாடல் மற்றும் சமுக முன்னேற்றம் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். 
 
மேலும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இப்பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகளுக்குமாக இன்றைய தினம் பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாழ்வாதாரத்திற்கு 2 கோடி ரூபாய்களும், உட்கட்டுமானத்திற்காக 2 கோடி ருபாய்களும், வீடு திருத்த வேலைகளுக்காக 40 இலட்சம் ரூபாய்களும், விளையாட்டு மைதான புனரமைப்பிற்காக 14 இலட்சம் ரூபாய்களும், பாடசாலை மேம்பாட்டிற்காக 19 இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமையிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினையும் வழங்கியுள்ளது. அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. நல்லவிடயங்களை நாம் பாரட்ட வேண்டும் எனத் தெரிவித்தார். 

Related posts