இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எதிர்காலத்தில் மூவின மக்களையும் சுதந்திரமற்றவர்களாக மாற்றிவிடும்… (கல்முனை மாநகரசபை உறுப்பினர் – எஸ்.ராஜன்)

எமது வருங்கால சந்ததியின் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரத்தை உரிமையுடன் அனுபவிப்பதற்கும், பயங்கரவாதி என்ற முத்திரை இல்லாமல் வாழ்வதற்கும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் போராட்டத்திற்கு அனைத்து இன மக்களும் ஒன்றுபட வேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் இச்சட்டம் மூவின மக்களையும் சுதந்திரமற்றவர்களாக மாற்றிவிடும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.
 
இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஏற்பட்டில் கல்முனையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
பயங்கரவாதத் தடைச்சட்டமானது 1979ம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து எமது தமிழ் மக்கள் சொல்லொனாத் துயர்களை அனுபவித்து வருகின்றார்கள். எமது இளைஞர் யுவதிகள், ஒன்றுமறியா உறவுகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இச்சட்டத்தின் மூலம் சிறையிலிடப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகள் என்ற பெயரிலே கைது செய்யப்படுகின்றார்கள்.
 
கடந்த ஆண்டு காலத்தில் முகநூல், மேடைப் பேச்சுக்கள் மற்றும் சுதந்திரமான கதையாடல்களின் போதெல்லாம் அதனைக் காரணமாகக் காட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்து பல ஆண்டு காலங்களாகச் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.
 
இலங்கை நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவே இல்லை. தமிழர்கள் எதுவித சுதந்திரமுமே இல்லாமல் வாழும் இந்த நாட்டிலே ஒரு சில தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றார்கள். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் பேசுவதற்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கும் போது, சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது எந்தவகையில் நியாயம்.
 
இவ்வாறான இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வருகின்ற காலத்தில் மூவின மக்களையும் சுதந்திரமற்றவர்களாக மாற்றிவிடும். இந்த நாட்டில் மூவின மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் ஜனநாயகத்துடனும் வாழ வேண்டுமாக இருந்தால் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் எவ்வாறு தங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்களோ அதேபோன்று இலங்கையிலும் நிலைமை வர வேண்டும். எமது எதிர்கால சந்ததி பயங்கரவாதி என்ற முத்திரை குத்தப்படாமல் வாழ வேண்டுமாக இருந்தால் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.
 
இவ்வாறான கொடூரமான சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மற்றும் நாடுபூராகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை தமிழரசு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.  
 
இவ்வாறான விடயங்களை சர்வதேச நாடுகளும், இந்த நாட்டின் ஜனாதிபதியும் கருத்திற்கொள்ள வேண்டும். எமது மக்களின் உரிமையை அனுபவிப்பதற்கு இடமளிக்க வேண்டும். எமக்கான உரிமையே எமது சுதந்திரமாகும். வருங்கால சந்ததி தங்களின் எழுத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை உரிமையுடன் அனுபவிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதற்கு இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அனைத்து இன மக்களும் கட்சி வேறுபாடுகளைக் களைந்து கையெழுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related posts