மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்கள் சார்ந்த முரண்பாடுகளை அடையாளப்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பதற்கான கலந்துரையாடடொன்று இன்று (16) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரிகளும், பன்நாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமும் இணைந்து வரலாற்று ரீதியான மற்றும் புவிச்சரிதவியல் பிரதேசங்களை வரைபடமாக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டமானது இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதப் பதிக்குள் வரைபடமாக்க திட்டமிட்டுள்ளது.
இதன்போது பாதிப்பிற்குள்ளான சுற்றுச்சூழலை அடையாளப்படுத்தி நடைமுறை ரீதியிலான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், வாவிகள் விரிவடைவது மட்டுமல்லாமல் விவசாயம் மேற்கொள்ளும் வயல் நிலங்களும் பாதிப்படைவதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டல் தாவரங்களை அழிப்பதனால் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், வாவியை நம்பி ஜீபனோபாயத்தில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் பாதிப்பும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த இக் கலந்துரையாடலின்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா, பிரதேச செயலாளர்கள், மாகாண பொறியியலாளர், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.