மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்தின்பால் அதீத அக்கறையுடன் மாவட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட சமூக நலன்சார் விடயங்களை மக்களது காலடிக்கே தேடிச்சென்று உதவித்திட்டங்களை ஆற்றிவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனமானது திகழ்ந்துவருகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 05/06/2022 ஆந் திகதி உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் 05/06/2022 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு பெரிய உப்போடை மற்றும் சின்ன உப்போடை பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களில் மீனவர்களின் மீன் பிடி செயற்பாடுகளிற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் அழுகிய நிலையில் தேங்கிக்கிடக்கும் ஆற்றுவாழை தாவரங்களையும் அகற்றி தூய்மைப்படுத்தி, குறித்த பகுதி மக்களுக்கு இதமான துர்நாற்றம் அற்றவொரு சூழலை அமைத்துக்கொடுக்கும் செயற்பாட்டினையே சிரமதானத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகள் அதிகரித்து வரும் நிலையில், அதிலும் குறிப்பாக டெங்கு நுளம்பு பெருகக்கூடிய அபாய நிலையை தோற்றிவிக்கும் வண்ணம் பொதுமக்கள் அசமந்தப்போக்குடனும் செயற்பட்டு வருவதனால் மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு நோய் தொடர்பாக சிவப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் அதற்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனமானது சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை இனங்கண்டு அப்பகுதிகளை துப்பரவு செய்யவுள்ளதுடன், மட்டக்களப்பிற்கு அழகு சேர்க்கும் வாவியின் கரையோர பகுதிகளையும் அழகுபடுத்தி சுகாதாரமான ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு மாக திட்டங்களை வகுத்துள்ளதுடன், மாவட்டத்தின் சுற்றாடலை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு வளங்களை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி ஏ.யேசுதாசன் அடிகளாரது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த தூய்மைப்படுத்தும் செயற்பாடானது,
கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் (SSEP) கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்கான நிதிப்பங்களிப்பினை கரிட்டாஸ் ஸ்ரீலங்கா தேசிய மத்திய நிலையத்தின் (SEDEC) ஏற்பாட்டில் Missereor நிறுவனம் வழங்கி வைத்துள்ளதுடன், சுகாதாரமான சூழலை உருவாக்க முன்னின்று செயற்பட்டுவருகின்றனர்.