மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு நான்காம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களுக்குமான பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (05) திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்துள்ள நிலையில் நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலுக்கமைய முதற்கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கு குறித்த நான்காம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்களது மேற்பார்வையின் கீழ் மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி இ.உதயகுமாரின் வழிநடாத்தலில் மண்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் வி.விஜயகுமார், கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமீர்தாப் மற்றும் புளியந்தீவுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் எஸ்.தீபக்குமார் உள்ளிட்ட மேலும் பல சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களினால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதுடன், குறிப்பாக 60 வயதுக்கு மேட்பட்டவர்களும் நாற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் குறித்த தடுப்பூசியினை செலுத்துவதனால் உயிர் ஆபத்தினை தவித்துக் கொள்ள முடியும் என்பதுடன், எமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் கொவிட் – 19 பரவல் மீண்டும் ஆரம்பித்துவருவதுடன் மரணங்களும் பதிவாகிவருவதனால் தடுப்பூசியை பெற்றிக்கொள்வதன் தேவையை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதுடன் உயிர் ஆபத்திலிருந்து தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்.