புளியந்தீவு ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான வருடாந்த பாதயாத்திரையானது இன்றைய தினம் இடம்பெற்றது.
புளியந்தீவு ஆனைப்பந்தி விக்கினேஸ்வரர் ஆலயத்தில் பூசை நிகழ்வுகள், யாத்திரிகர்களுக்கான உருத்திராட்ச மாலை அணிவித்தல் நிகழ்வு, வேலுக்கான விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்று அடியார்கள் யாத்திரையை ஆரம்பித்தனர்.
இவ் யாத்திரையானது புளியந்தீவு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், திரௌபதி அம்மன் ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களிலும் தரிசிப்புகளை மேற்கொண்டு நாளைய தினம் தாந்தாமலை முருகன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது.
ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடவையாக இடம்பெறுகின்ற இவ் யாத்திரை நிகழ்வில் இவ்வருடம் பல ஆலயங்களில் இருந்தும் பக்த அடியார்கள், யாத்திரிகர்கள் கலந்து கொள்கின்றமை சிறப்பம்சமாகும்.