எருவில் இளைஞர் கழகம், உதயநிலா கலைக் கழகம், கண்ணகி விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து எருவில் பிரதேசத்தில் கொம்புச் சந்தியில் அமைக்கப்பட்ட உழவர் சிலை திறப்பு விழாவானது இன்றைய தினம் கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினருமான இ.வேணுராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேசபை உறுப்பினர்களான சி.காண்டீபன் ,இ.வினோதினி ஆகியோருடன் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசிகரன், பிரதேச சபை அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிருவாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச நலன்விரும்பிகளின் நிதிப் பங்களிப்பின் மூலம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த உழவர் சிலையானது இன்றைய தினம் வைபவ ரீதியாக அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உழவர் சிலை நிர்மானிப்பிற்கு பங்களிப்பு வழங்கிய அனுசரணையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, எருவில் நூலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் ஏனைய நலன்விரும்பிகளால் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.