நாவிதன்வெளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்படும் சட்ட ரீதியான மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் அதனை அமுல்படுத்துவதிலும் பிரதேச சபையின் தவிசாளர் விடாப்பிடியான மறுப்பு மற்றும் வேண்டுமென்ற அலட்சியம் செய்வதன் காரணமாகவும், அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாகவும் தவிசாளரை அப்பதவியிலிருந்து நீக்கக்கோரி நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் ஆளுநர், உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்டோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இவ் ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
2006 இல் தாபிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. பிரதேசசபையின் தவிசாளராக இருந்த கௌரவ. தவராசா கலையரசன் அவர்கள் 2020 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின் ஏற்பட்ட தவிசாளர் வெற்றிடத்திற்கு சுயேட்சை குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 2020.09.02 ஆம் திகதி சபையின் உறுப்;பினரான அமரதாச ஆனந்த அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர் அவர்கள் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தினால் சுமத்தப்பட்ட கடமைகளை புரிவதற்கு விடாப்பிடியான மறுப்பு மற்றும் வேண்டுமென்று அலட்சியம் செய்தமையால் பிரதேச சபையினால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் தடைப்பட்டுள்ளதுடன் சபை நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது. அத்துடன் கடந்த காலங்களில் பிரதேச அபிவிருத்திக்காக மத்திய அரசிடம் இருந்து கொண்டுவரப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் அரசியல் கால்புணர்ச்சி, அவரின் அலட்சியம் காரணமாக உரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படாமல் நிதி ஒதுக்கீடுகள் திரும்பியுள்ளன.
சட்டத்திற்குட்பட்டு மக்கள் நலன் சார்ந்து சபையில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக எடுக்கப்பட்ட அநேகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அத்துடன் எடுக்கப்படும் சில முக்கிய தீர்மானங்கள் கூட்ட அறிக்கையில் இருந்து அகற்றப்பட்டு சபையில் கலந்தாலோசித்து நிறைவேற்றப்படாத தீர்மானங்கள் உட்பகுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மக்களுக்கு அன்றாடம் வழங்கப்பட வேண்டிய சேவைகளான திண்மக் கழிவகற்றல், குடிநீர் வழங்கல், வீதி மின் விளக்கு பொருத்துதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளது.
2022.10.11 ஆம் திகதி நடைபெறவிருந்த பிரதேச சபையின் 56வது பொதுச் சபை கூட்டம் எதுவித நியாயபூர்வமான காரணங்களும் இன்றி தவிசாளரால் 2022.10.27 ஆம் திகதிக்கு பிற்படுத்தப்பட்டது. இச் செயற்பாட்டிற்கும், தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2022.10.11 ஆம் திகதி பிரதேசசபையின் 13 உறுப்பினர்களுள் பத்து உறுப்பினர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டதுடன் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டம் 11(3) இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் விசேட கூட்டத்தை நடத்துமாறு பத்து உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கோரிக்கைக் கடிதத்தை செயலாளரிடம் கையளித்தோம். பிரதேச சபைகள் சட்டத்தின்படி ஏழு நாட்களுக்குள் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருக்க வேண்டும் இருப்பினும் இதுவரை விசேட கூட்டம் நடத்தப்படவும் இல்லை இது தொடர்பாக எது விதமான பதிலும் எங்களுக்கு கிடைக்கப்பெறவுமில்லை. இதனால் பிரதேச சபைகள் சட்டம் பிரிவு 11(4) இல் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய விசேட கூட்டத்தை நடத்துமாறு 2022.10.20 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கை கடிதத்தை அம்பாறை உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு தொலைநகல், வாட்சப், மின்னஞ்சல் மற்றும் பதிவு தபால் மூலம் அனுப்பினோம் இக்கடிதத்தின் பிரதிகளை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும், கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் அனுப்பி இருந்தோம் இதற்கும் கூட்டம் கூட்டப்படவுமில்லை எமக்கு எதுவித பதிலும் கிடைக்கவில்லை.
மக்கள் பிரதிநிதிகளான பிரதேசசபை உறுப்பினர்களாகிய எம்மால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் வேண்டுமென்றே தவிசாளரினால் தொடர்ந்து அலட்சியம் செய்யப்பட்டுள்ளதுடன் சபையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் வேண்டுமென்று அலட்சியம் செய்யப்படுவதுடன் சபையில் எடுக்கப்படாது உட்புகுத்தப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சபை நிதி பயன்படுத்தப்படுகின்றன.
எனவே உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்விடத்தில் தலையீடு செய்து 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டம் பிரிவு 185(1)(அ),(ஆ),(இ) ஆகிய பிரிவுகளின் பிரகாரம் தவிசாளரான கௌரவ அமரதாச ஆனந்த அவர்களை தவிசாளர் பதவியிலிருந்து அகற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், தவிசாளருக்கு எதிர்ப்பு வெளியிடும் பெண் உறுப்பினர்கள் வேண்டுமென்று அவதூறு செய்யப்படுவதும், உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் அளவிற்கு தவிசாளர் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகும், இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை தவிசாளருக்கு எதிராகவோ, உயிர் அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஊடக சந்திப்பில் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்களான தி.யோகநாயகன் (சுயேச்சை குழு), அ.சுதர்சன் (தமிழ் தேசிய கூட்டமைப்பு), மு.இ.மு.ஜகான் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி), திருமதி. நா.தர்சினி (தமிழ் தேசிய கூட்டமைப்பு), மு.நிரோஜன் (தமிழ் தேசிய கூட்டமைப்பு), யோ.தர்சன் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.