தமிழர்களின் பூர்வீக நிலங்களை காலாகாலமாக அபகரிப்பதில் பல தரப்பினர் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார்கள்
வடக்கு கிழக்கில்
தமிழர்களின் பூர்வீக நிலங்களை காலாகாலமாக அபகரிப்பதில் பல தரப்பினர் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார்கள். அதில் ஓரங்கமே இது. இதற்கு உயிர் போனாலும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆக்ரோஷமாக கூறினார்.
அதன் போது பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன். ,பிரதேச சபை தவிசாளரான ஜெயசிறில்( காரைதீவு) , மற்றும் மாணவர் மீட்பு குழுத்தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான செல்வராஜா கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
அவர் மேலும் கூறுகையில்….
மட்டக்களப்பு பொத்துவில் பிரதான வீதியில் உள்ள பொத்துவில் சின்ன வட்டிவயல் 17 ஏக்கர் காணி கடந்த 120 வருட காலமாக தமிழனின் உறுதிப் பூமியாக இருந்து வந்தது . அந்த பூமியை உரிமையாளர் 1938 களில் ஐந்து ஆலயங்கள் 02 பன்சலைகள் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் அன்பளிப்பு செய்திருந்தார். அதாவது இக் காணி எந்த சந்தர்ப்பத்திலும் அரசகாணியாக இருந்தது இல்லை. தொடர்ந்து தனியார் உறுதி காணியாக இருந்து வருகிறது.
வரலாறு அப்படி இருக்கையில் வெறும் அரசியலுக்காக எதிர்வரும் தேர்தல்களை முன்வைத்து இனங்களிடையை முரண்பாடுகளை வளர்க்க ஒருசாரார் முயற்சி செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
வழக்கமான பாணியில் இக்காணியை கபளீகரம் செய்யும் நோக்கில் நாளை திங்கட்கிழமை(14) சில இனவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றதாக அறிகிறேன்..
எதுவும் சரிவராது.
இது அரச காணியோ அல்லது வேறோருவரின் காணியோ அல்ல இது ஆலயங்களின் காணி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிய வேண்டும்.
எனவே தேவைக்கில்லாத இனமுரண்பாடுகளை வளர்க்காமல் ஐக்கியத்தோடு வாழ முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூவினமும் நிம்மதியாக வாழலாம். என்றார்.