பொத்துவில் மைதான விடயம் சமூக ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடக் கூடாது… (பா.உ – த.கலையரசன்)

பொத்துவில் மைதானம் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காணி தொடர்பான விடயம் சமூக ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கின்றேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பொத்துவில் மைதானம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட வட்டிவெளிக் காணி சம்மந்தமாகக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேசத்திற்கு மைதானம் தேவை என்பதில் நான் மாறுபட்ட கருத்து கொண்டவன் அல்ல. ஆனால் குறிப்பிட்ட மைதானத்திற்கென எடுக்கப்படும் வட்டிவெளி பிரதேச காணி தொடர்பில் தமிழ் முஸ்லீம் சமூகங்களது இணக்கப்பாடு தேவை.

பிரதேசத்தின் சமூகங்கள் சுமூகமாக இணங்கிக் கொண்டு இந்த விடயத்தைக் கையாள வேண்டும். இந்த மைதானம் அமைக்க உத்தேசிக்கப்படுகின்ற காணி தனியார் காணி, கோவிலுக்குச் சொந்தமான காணி என்றே சொல்லப்படுகின்றது. அது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் காட்டப்பட்டன. எனவே சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் இல்லாத வகையில் இதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

தற்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றதான சூழ்நிலை நிலவுகின்றது. இந்த காணி தொடர்பான விடயம் சமூக ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கின்றேன்.

இது தொடர்பில் பல ஆலயங்களின் நிருவாகத்தினர் என்னிடம் கலந்துரையாடினார்கள். எனவே சமூக மட்ட பிரச்சனைகள் பலவற்றிற்குத் தீர்வு காணப்பட்டதன் பிற்பாடு இந்த மைதான காணி விடயத்தை கையாளலாம் என்பதே எனது நிலைப்பாடு.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கூட இவ்வாறான நிலம் சம்பந்தமான விடயத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனவே பொத்துவில் விளையாட்டுமைதானத்தினூடாக ஒரு இன முரண்பாடு உருவாகாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

இது அரச காணியா, தனியார் காணியா என்பது தொடர்பில் பிரதேச செயலகத்தினூடாக ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுத்தால் எதுவித ஆட்சேபனைகளும் இருக்காது.

 

Related posts