ஊடகச் சந்திப்பில் சிறிதரன் எம்பி.
தேர்தலுக்காக வார்த்தைகளை தவறாக பயன்படுத்த மாட்டேன். தலைவராக தெரிவானால் தடம் மாறுவேன் என்று சந்தேகம் வேண்டாம். அதற்காக தேங்காய் உடைக்கவும் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யவும் தேவையில்லை.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அம்பாறை மாவட்ட ஊடக சந்திப்பில் தெரிவித்தார் .
கூடவே அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் தலைவனை மக்கள் தொண்டர்கள் தெரிகின்ற சந்தர்ப்பம் வந்திருக்கிறது.வேறெந்த கட்சியிலும் இல்லாத ஜனநாயக அணுகுமுறை இது. தேர்தல் என்றால் வெற்றி தோல்வி சகஜம். பரீட்சை போல. அதில் சில நெருடல்கள் இருக்கத் தான் செய்யும். ஆனால் அது கால ஓட்டத்தில் மாறி போகும் .
எமது நோக்கம் எல்லாம் தமிழ் தேசியத்தை நோக்கியதாகவே இருக்கும். மக்களோடு இணைந்து பயணிக்க வேண்டியது எனது கடமை. அதனை நான் மக்களோடு மக்களாக இணைந்து முன்னெடுப்பேன் . என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.. இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன். ஆரோக்கியமான கருத்துக்களை மனம் விட்டு பேசினார்கள். நான் தலைவரானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற துல்லியமான கருத்து ஏற்பட்டிருக்கின்றது.
29 கிராம சேவை பிரிவுகளை கொண்ட தமிழர் பிரதேசமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உள்ளது.
ஏலவே இது வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சகோதர இன சில அரசியலாளர்கள் இதனை தடுப்பது பகிரங்கமாகவே தெரிகிறது .
நான் தலைவரானாலோ இல்லையோ எமது கட்சி இந்த பிரதேசம் செயலகம் தொடர்பில் தனித்துவமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் .
இதற்காக அன்று கோடீஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் இன்று கலையரசன் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாம் இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி இருந்தார்கள். இப்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
எது எப்படியோ அரசாங்கம் இந்த செயலகத்தை மக்களிடம் கையளித்தேயாக வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு .எமது கட்சியின் நோக்கமே இனவிடுதலைக்காக இலக்காகும். அதனை உடைப்பதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் போதை வஸ்து பாவனை நில ஆக்கிரமிப்பு புத்தர் சிலை விவகாரம் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் .அதற்கு எமது மக்கள் பலியாக கூடாது. நாங்கள் மக்களோடு இணைந்து பயணிக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம் .அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
வெற்றியௌ தோல்வியோ நாங்கள் கட்சிக்காக இணைந்து பயணிப்போம் .கட்சியை சீர் குலைக்கும் எண்ணம் கடுகளவும் இல்லை. தேசிய இலக்கை நோக்கி புலம்பெயர் எமது உறவுகளுடன் இணைந்து எமது மக்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கு நாங்கள் முனைப்பாக செயல்படுவோம். என்றார்.