திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) தொடக்கம் சிறைச்சாலையில் விசேட பிரிவில் தடுத்து வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதேவேளை, விளக்கமறியல் கைதிகளுக்கு அநாவசியமான முறையில் உணவு வழங்குவதைத் தடுப்பதற்கும் அவர்களை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்காதிருப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிறைக்கைதிகள் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை வளாகத்தில் தொலைபேசி அழைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சிறைச்சாலையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கைதிகளுக்கு மேலும் சிறைத்தண்டனையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் கைதிகளுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையுடன் மேலும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை நீடிப்பதற்கு சிறைச்சாலைகள் நீதவான் ஊடாக அனுமதியைப் பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டினார்.