பொருளாதார சமத்துவத்தை கோரி தமிழர்கள் போராடவில்லை என்கிற தார்ப்பரியத்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ முதலில் விளங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துதல், வறுமையை ஒழித்தல் ஆகியவற்றின் மூலமாக தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுப்பார் என்று பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே இராசையா இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
தமிழர்களின் போராட்டம் பொருளாதார சமத்துவத்துக்கானதோ, வறுமை ஒழிப்புக்கானதோ அன்றேல் அபிவிருத்திக்கானதோ அல்ல. மாறாக உரிமைக்கானது. இந்த உண்மையை கோத்தாபய ராஜபக்ஸ முதலில் விளங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இருப்பு, இறைமை, பாதுகாப்பு, சுயாட்சி, சுதந்திரம், உரிமை ஆகியவற்றை பெறுவதற்காகவே தமிழர்கள் காலம் காலமாக போராடி வருகின்றனர். போராட்ட வடிவங்கள்தான் மாற்றம் பெற்று உள்ளனவே ஒழிய போராட்டத்தின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது. அது தெளிவானதாகவும் தெரிகின்றது. ஒரு வசனத்தில் சொல்வதானால் தமிழர்கள் தனி தேசியம் என்பதை சிங்கள பேரினவாதம் ஏற்று நடக்க வேண்டும்.
தமிழர்கள் தனி தேசியம் என்பதை சிங்கள பேரினவாதம் ஏற்று மதித்து நடக்கின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமானதாக இருக்கும். மாறாக பொருளாதார சமத்துவம், வறுமை ஒழிப்பு, அபிவிருத்தி போன்ற வார்த்தைகள் அழகானவையாக இருக்க கூடியனவே ஒழிய அவற்றின் மூலம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பெறப்படும் என்று சொல்வது எவ்வகையிலும் அடிப்படை அற்றது.
தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை குறித்து எதுவும் தெரியாதவராகவே கோத்தாபய ராஜபக்ஸ காணப்படுகின்றார். இந்நிலையில் இவர் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேசுவது வேடிக்கையானது. அதே நேரம் இதுவே தமிழ் மக்களின் சாப கேடும் ஆகும். ஏனென்றால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினையின், போராட்டத்தின் அடிப்படை தெரியாதிருக்கின்றது. இதை சிங்கள தேசத்துக்கு தெரியப்படுத்தவும், தெளிவுபடுத்தவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறி விட்டது.