மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இவ்விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு இராணுவ அதிகாரி வருகை தராத நிலையில் பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் அடையாளம் காணப்பட்ட குளங்கள் புனரமைப்பு, மீன்பிடி மணல் தீடைகளுக்கான எல்லைக்கட்டுப்பாடு, வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் காணிகள் எல்லையிடுதல், முள்ளிக்குளம் காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், இந்தியாவில் இருந்து நாடு திரும்பி வீட்டுத்திட்டம் கிடைக்காத அனைத்து மக்களுக்கும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மான்னார் மாவட்டத்தில் உள்ளக குடி நீர் வசதியை பெற்றுக்கொள்ளாத கிராம மக்களுக்கும் குறித்த வசதிகளை உடன் எற்படுத்திக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மக்களின் காணிகளில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைகள் போடப்பட்டுள்ளமை குறித்தும், அதிகளவான எல்லைகளை அகற்றுவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத் தலைவர்களான வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.