அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சீ.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
நடப்பு வடமாகாண சபைக்கான முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் செயற்படுகின்ற நிலையில், அவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த காலங்களில் வெளிப்பட்டிருந்தன.
எனவே அடுத்த வடமாகாண சபைத் தேர்தலின் போது அவருக்கு பதிலாக, கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லாத மாற்று அணியொன்றின் ஊடாக களமிறங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விக்னேஸ்வரனையே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பில் முதற்கட்ட இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு உரிய தருணத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.