அக்கரைப்பற்று பகுதிகளின் வீதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தகளை பெற்றுக்கொண்ட ஒருவரிடம் அந்த ஒப்பந்தங்களுக்கான நிதியை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்ட அபிவிருத்தி அதிகாரியொருவரை நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சபையில் அபிவிருத்தி அதிகாரியாக கடமையாற்றும் நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் அக்கரைப்பற்று பகுதிகளில் வீதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட ஒருவரிடம் அந்த ஒப்பந்தங்களுக்கா நிதியை விரைவாக பிரதேச சபையிலிருந்து பெற்றுத் தருவதற்காக 60,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
இதில் 15 ஆயிரம் ரூபாவை முதலே பெற்றுக்கொண்ட இவர் இன்று அக்கரைப்பற்று சாகமபார என்ற பகுதியில் அமைந்திருக்கும் முறைப்பாட்டாளரின் வர்த்த நிலையத்தில் வைத்து மிகுதி 45 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த வேளையில் ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு இன்று காலை 9.57 மணியளவில் கைதுசெய்யப்பட்டவரை தொடர் விசாரணைகளுக்குட்படுத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.