நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன், வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்காக மாகாணங்களின் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் அதேபோன்று அரச உத்தியோகத்தினரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்ப்பதாக இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் போன்றே மக்களின் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் செயற்படுத்துவதற்கு இதன்போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்களின் குடிநீர், சுகாதார, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றதுடன், அப்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக இன்று மீளாய்வு செய்யப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் மடு புண்ணிய பூமியில் குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபவிருத்தி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் அபிவிருத்தி, ஆனையிறவு மற்றும் குரஞ்சைத்தீவு உப்பளங்களின் அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி மற்றும் வடக்கில் சிறு கைத்தொழில்களை வலுவூட்டவும் மறுசீரமைக்கவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் வட மாகாணத்தில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியன அதிகரித்துச் செல்லல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வீடமைப்பு, நீர் வழங்கல், சுகாதாரம் ஏற்பாடு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க முப்படையினர் இணக்கம் தெரிவித்திருப்பதுடன், அந்த விடயம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்ஹ, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதில, டீ.எம்.சுவாமிநாதன், றவூப் ஹக்கீம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் பீ.சிவஞானசோதி, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.