72 ஆவது வருடப்பூர்த்தியை இன்று கொண்டாடும் ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் மிகப்பெரிய தனி அரசியல் கட்சியாகும்.
எனினும், ரணில் விக்ரமசிங்க தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 1994 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி அதிகாரத்தை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 24 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற முடியாமற்போனது.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறினர்.
1949 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 69 வயதாகின்றது.
72 ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகக் காலம் தலைவராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க 24 வருடங்களாக அந்தப் பதவியில் நீடிக்கின்றார்.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்திரமே முன்னிலை பெற்ற ரணில் விக்ரமசிங்கவால் அதற்கு மேலதிகமாக நடைபெற்ற பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சியை வெற்றிப்பாதைக்கு
இட்டுச்செல்ல முடியவில்லை.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் கவிழ்ந்தமையினால் ஆட்சிப்பீடம் ஏறும் வாய்ப்புக் கிட்டியபோதிலும் அதனைத் தக்கவைத்துக்கொண்டு வெற்றி நடைபோடும் இயலுமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளர்களை நிறுத்த முடியாமற்போனமை கவலைக்குரிய விடயமாகும்.
ரணில் விக்ரமசிங்க ஜானதிபதித் தேர்தலிலிருந்து ஒதுங்கினாலும் கட்சியின் வேறொரு தலைவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு கட்சியினுள் உட்பூசல்கள் வலுப்பெற்றதைப் பொருட்படுத்தாமல், சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அத்துடன் நில்லாமல் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரின் பின்னால் மறைந்து கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதைத் தவிர்த்தார்.
இதன்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் தயவில் பாராளுமன்றத்தில் நாற்பது ஆசனங்களை மாத்திரம் தன்னகத்தே வைத்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு சூட்சுமமான முயற்சிகளை முன்னெடுத்து 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் தனது அதிகாரத்தை அதிகரித்துள்கொள்வதற்கு முயற்சித்தார்.
ஆட்சியில் இருந்தபோதே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வருடத்தை விட குறைந்த வரலாற்றைக் கொண்ட கட்சியொன்றிடம் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்தது.
தலைமைத்துவத்திற்கு இவ்வாறு பல தடவைகள் சவால்கள் விடுக்கப்பட்டபோதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சலுகைகளைப் பெற்று பதவிகளை வகிக்கின்றனர்.
பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இறுதியில் அகிலவிராஜ் காரியவசத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி கிட்டியது.
இதற்கு முன்னரும் தலைமைத்துவ சபை , பிரதித் தலைவர் , உப தலைவர் மற்றும் மறுசீரமைப்புக் குழு என்ற போர்வையில் கட்சியை மறுசீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் ரணில் விக்ரமசிங்க தனது தலைமைத்துவத்தை பாதுகாத்துக்கொண்டார்.
கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் நாடு தொடர்பில் சிந்திக்காமல் செயற்படுவதன் விளைவாக இன்று ஐக்கிய தேசியக் கட்சியே பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலையில், 2030 ஆம் ஆண்டு வரை ஆசனத்தை விட்டுச் செல்வதில்லை என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஆகவே, அன்று தலைவரால் ஏமாற்றப்பட்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தற்போது உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.