தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அணி திரண்டு நின்றதை போல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பின்னால் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அணி திரண்டு நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுன கட்சியின் காரைதீவு அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கம் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த கூட்டு எதிரணியால் கொழும்பில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணி தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலை இவரின் காரைதீவு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
தமிழ் மக்களின் தேசிய தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்தார். அதே போல சிங்கள மக்களின் தேசிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரவாகம் எடுத்து உள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு திரண்டு நின்றனர். அதே போல சிங்கள மக்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பின்னால் ஒன்றாக அணி திரண்டு நிற்பது கண்கூடாக உள்ளது.
எம். ஜி. ஆர் என்கிற மூன்றெழுத்து எவ்விதம் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானித்து வந்திருக்கின்றதோ அதே போல எம். ஆர் என்கிற இரண்டெழுத்து எமது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையும் தீர்மானிக்கின்ற மந்திர சொல்லாக வியாபித்து நிற்கின்றது. சிங்களவர்களின் மக்கள் திலகமாக, இதய கனியாக அவதாரம் எடுத்து உள்ள மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்ற புத்திசாலித்தனமான தீர்மானத்தை தமிழ் மக்களும் எடுத்தே ஆக வேண்டும். முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக்ஸவையே ஆதரிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்து விட்டனர் என்கிற உண்மையையும் தமிழர்கள் உள்ளபடி உணர வேண்டி இருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே செல்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் நாயகர்கள்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் மீண்டும் ஒரு மஹிந்த யுகம் மிக விரைவில் மலரும் என்கிற மகத்தான செய்தியை அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள், பிரமாண்ட எதிர்ப்பு பேரணிகள் பறை சாற்றி கொண்டு இருக்கின்றன. எனவே விரைவில் மீண்டும் மலர உள்ள மஹிந்த ராஜபக்ஸ யுகத்தின் உருவாக்கத்தில் பங்காளிகளாக தமிழர்கள் அனைவரும் மாற வேண்டும்.