மக்கள் பணத்தில் ஆடம்பர வாகனம் தேவையில்லை… மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தன்

மட்டக்களப்பு மாநகரசபையின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசியமான ஆடம்பரச் செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்கமுடியாது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 09வது அமர்வின் போது மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட மாநகரசபைக்கு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வது தெடர்பிலான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாநகரசபையானது பொது மக்களின் வரிப்பணத்தில் இயங்குகின்ற சபையாகும், இங்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்யும் பணத்தில் மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பல அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியும்.

எமது மாநகரசபையில் கழிவகற்றல் வியமானது போதியளவு வாகனமின்மைக் குறைபாட்டோடு காணப்படுகின்றது. இதனால் பல கிராமங்களில் குறித்த நாட்களுக்குள் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான நிலைமை இருக்கும் பொது மாநகரசபைக்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்வதற்கு சுமார் 6.8 மில்லியன் பணம் செலவு செய்து கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எமது மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர்கள் செல்வதற்காக போதியளவு வாகனங்கள் உள்ள போது இன்னுமொரு வாகனம் கொள்வனவு செய்ய வேண்டியதில்லை. இப்பணத்தில் கழிவகற்றல் சேவைக்கு அவசியமான நவீனரக வாகனங்களைக் கொள்வனவு செய்ய முடியும். இதன்மூலம் மாநகரசபையின் முக்கிய தேவையினைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.  இவ்வாறான திர்மானத்தை தாம் எதிர்ப்பதாகவும் இதன் போது அவர் தெரிவித்திருந்தார்.

Related posts