‘எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே எமது உரிமை சார்ந்த செயற்பாடு என
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
மீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் மீனவர்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமக்கு இந்த உரிமை சார்ந்த செயற்பாடுகள் வேண்டாம், நூறு வீதம் அபிவிருத்திதான் வேண்டும் என சொன்னால் அனைத்தையும் இழந்து இன்னுமொரு சமூகத்திற்கு அடிமையாகும் சமூகமாக நாம் மாற்றமடைவோம்.
நாங்கள் அடுத்த தலைமுறை தொடர்பில் சிந்திக்கும்போது அதனை சிலர் கேலியாக எடுத்துக்கொள்கின்றனர். புல்லுமலையிலுள்ள பெருவட்டை குளம் இன்று காத்தான்குடியை சேர்ந்த தனிநபர் ஒருவரினால் அபரிக்கப்பட்டுள்ளது.
சங்குளகுளத்திற்கு தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடி குளத்திற்குள் ஒருவர் வேலி அமைக்கின்றார். வாகரை ஆளம் குளத்தில் மேவான்டகுளத்தினை ஒரு அமைச்சர் கையில் வைத்துள்ளார்.
குளத்தின் மீன்பிடியை நம்பி 29 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அந்த குளங்களை இன்று தனிநபர்கள் அரசியல் பின்புலத்துடன் உரிமை கொண்டாடுகின்றனர்.
குளங்கள் பறிபோகின்றது, வாவிகள் பறிபோகின்றது, நிலம் பறிபோகின்றது, கோயில்கள் உடைக்கப்படுகின்றன. இவை தொடர்பில் யாரும் பேசக்கூடாது. எங்களுக்கு கிறவல் வீதிகள்தான் வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.
இதற்காகவா 40 வருடத்திற்கு மேலாக எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிர்கள் இந்த மண்ணில் புதைக்கப்பட்டன. இந்த மண்ணுக்காகவே இவ்வளவு இழப்புகளையும் இந்த சமூகம் சந்தித்தது.
இந்த மண்ணை பாதுகாக்கவேண்டும். இந்த நிலத்தில் இருந்து நாங்கள் அப்புறப்படுத்தப்படுவோமானால் இங்கு மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தியையும் நாங்கள் அனுபவிக்கமுடியாது.
மட்டக்களப்பில் உள்ள சிலர் தமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையென கருதுகின்றனர். ஆனால் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சினைகள் நாளை இங்கும் வரலாம். இன்று தாந்தாமலைக்கே இந்த பிரச்சினை வந்துவிட்டது.
எங்களுக்கு அபிவிருத்திகள் தேவை. அதனை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. இந்த மூன்று வருடத்தில் தமிழ் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் செய்யாத அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம்.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இந்த அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம். நாங்கள் அபிவிருத்தியுடன் சேர்ந்த உரிமை என்ற விடயத்துடன் சமாந்தரமாக பயணிக்கவேண்டும்.
அதனை சிந்திக்கும் சமூகம் என்ற நிலையில் இருந்து நாங்கள் இறங்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். சமூக பாரம்பரிய, கலைகலாசார பண்பாடுகளை மறந்து செல்லும் சமூகமாக தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது.
பொங்கு தமிழ் என்பது தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு விடயங்களை பிரதிபலிக்கும் விடயமாகும். அதுபோராட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை இனரீதியான செயற்பாடாகவும் பயங்கரவாத செயற்பாடாகவும் பார்க்கும் நிகழ்வு அல்ல. அது தமிழர்களின் கலைகலாசார பண்பாட்டு விடயங்களை பேணுகின்ற, பாதுகாக்கின்ற ஒரு விடயமாகும்.
அந்த பொங்குதமிழ் நிகழ்வுகளின் அடையாளமாகவே பொங்கு தமிழ் தூபிகள் அமைக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக பொங்குதமிழ் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அதில் வடகிழக்கு மலையகம் என அனைத்து உறவுகளும் பங்குகொண்டனர். இந்த அமைதியான சூழலில் அந்த பொங்கதமிழ் தூபிகள் புனரமைக்கப்பட்டு அண்மையில் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.
ஆனால் கிழக்கு பல்கலைகழகத்தில் அந்த தூபி புனரமைக்கப்பட்டு நிகழ்வு நடாத்தாமை கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில்தான் அகிம்சை போராட்டங்களும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டன. ஆயுதப்போராட்டமும் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விடயத்தில் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கான அனுமதிகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தினை வேறுபடுத்தப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல் தமிழர்களின் வாழ்விலுடன் தொடர்புபட்ட விடயம் என்பதை உணரவேண்டும்.
அன்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் தலைவர்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தினை அன்று இருந்த சில தமிழ் அரசியல் தலைவர்களும் விமர்சித்தனர். ஆனால் அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமே இன்று தமிழ் மொழிக்கு ஒரு அந்தஸ்த்தினை பெற்றுக்கொடுத்துள்ளது.
ஆயுதப்போராட்டத்தினையும் சிலர் பூச்சியத்தில் தொடங்கி பூச்சியத்தில் முடிந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்று தமிழர்களின் போராட்டம் சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கு இந்த ஆயுதப்போராட்டம் தான் காரணமாகும். தமிழர்களின் எந்த போராட்டமும் தோல்வியடையவில்லை என்பதே உண்மையானதாகும்.