மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் – பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எச்சரிக்கை!

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் மீதான பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு பல்கலைகழக நிர்வாகம் உரிய நடவடிக்கைளை முன்னெடுக்க தவறுவதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (திங்கட்கிழமை) நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், ‘யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகத்திற்குள் நடந்திருக்கின்றன.

ஆனால் அதற்குரிய முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அந்த குற்றங்களைச் செய்தவர்கள் தப்பித்துச் செல்லக் கூடிய நிலைமைய காணப்படுகின்றது.

குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இவ்வாறு மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதே போன்றதொரு குற்றச்சாட்டு, குறித்த பேராசிரியர் மீது கடந்த பல வருடங்களுக்கு முன்னரும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையிலையே இத்தகைய இழிவான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையினாலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நிர்வாகத்திற்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பேரவைக்கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் காணப்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.

Related posts